மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இலவச எக்கோ இருதயப் பரிசோதனை முகாம்
மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் கோவை அபிராமி மருத்துவமனை
மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் கோவை அபிராமி மருத்துவமனை சார்பில் திங்கள்தோறும் இலவச எக்கோ இருதயப் பரிசோதனை முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சேரலாதன் தலைமை வகித்து எக்கோ பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்தார்.
கோவை அபிராமி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
இலவச எக்கோ இருதயப் பரிசோதனை சேவை தலைமை மருத்துவர் சேரலாதன் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தினமும் 1,200 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். பிரசவம், அறுவை சிகிச்சை என 130 பேர் வரை உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது இருதய நோயாளிகளின் நன்மைக்காக கோவை அபிராமி மருத்துவமனை சார்பில் திங்கள்கிழமை தோறும் காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை இலவச எக்கோ இதயப் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இருதயப் பிரச்னை உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.
பரிசோதனையில் இருதய பாதிப்புக் கண்டறியப்பட்டால் தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கோவை அபிராமி மருத்துவமனையில் இலவச சிகிச்சை செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் துடியலூர் லஷ்மி மருத்துவமனை சார்பில் வியாழக்கிழமைதோறும் இலவச எக்கோ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.
அரசு மருத்துவமனை மருத்துவர் லட்சுமணகுமார், திட்ட அலுவலர் நந்தகுமார், செவிலியர்கள் சாரதாமணி, மும்தாஜ், நிர்மலா உள்பட பலரும் பங்கேற்றனர்.