"அனைத்துத் தகவல்களையும் தரவுகளாகப் பதிவு செய்ய வேண்டும்'
நமது அனைத்துத் தகவல்களையும் தரவுகளாக மாற்றி கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய நடுவண் நிறுவனத்தின் இல.இராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
நமது அனைத்துத் தகவல்களையும் தரவுகளாக மாற்றி கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய நடுவண் நிறுவனத்தின் இல.இராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள் என்ற தலைப்பில் 17-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ராமசாமி தலைமை வகித்தார். இதில் இந்திய நடுவண் நிறுவனத்தின் இல.இராமமூர்த்தி பேசியதாவது:
எல்லா இந்திய மொழிகளையும் விட தமிழ் மொழியின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணம் உத்தமம் போன்ற அமைப்புகள்தான். ஹிந்தி மொழியாகட்டும், வங்காள மொழியாகட்டும் அங்கு மட்டும்தான் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்தான் உத்தமம் போன்ற அமைப்புகள் வழியாக உலகெங்கும் கொண்டு செல்லப்படுகிறது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழியாக இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கருத்தரங்குகளும், மாநாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் ஊடகமும், தொழில்நுட்பமும் வெவ்வேறாக இருந்தன. ஆனால் தற்போது தொழில்நுட்பமும், ஊடகமும் ஒன்றாக உள்ளன. நமது அனைத்துத் தகவல்களையும் தரவுகளாக மாற்றி கணினியில் பதிவு செய்வதே சமூகப் பணியாகும் என்றார்.
அடுத்த மாநாடு இலங்கையில்: நிகழ்ச்சியில் உத்தமம் நிறுவனத்தின் தலைவர் அப்பாசாமி முருகையன் பேசுகையில், இந்த மாநாட்டில் 75 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் 55 பேரின் 60 கட்டுரைகள் மட்டுமே ஏற்கப்பட்டன. தமிழில் தரவுகளை அதிகரிக்கும் வகையில பல பகுதிகளில் உள்ள தமிழறிஞர்களையும், கணினி வல்லுநர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 18-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதில், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை கல்வி அதிகாரி முனைவர் மு.பொன்னவைக்கோ, முன்னாள் துணைவேந்தர் ஆனந்தகிருஷ்ணன், உத்தமம் செயல் இயக்குநர் தவரூபன் தங்கராஜா, பென்சில்வேனியா பல்கலைக்கழகம் முனைவர் வாசு அரங்கநாதன், கவிஞர் பெ.சிதம்பரநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.