தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?
தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி...
மக்களவையில் தென் மாநிலங்களைப் பலவீனப்படுத்தி, வட மாநிலங்களுக்கு கூடுதல் வலுச் சேர்க்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை திருத்த மசோதா - 2026 வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்டிப்பாக, ஏப்ரல் 16 - 18 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த அமர்வில், 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் வகையில், 2023 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதே முதன்மை நோக்கமாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
Advertisement
2029 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டுவர, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக 2011 கணக்கெடுப்பின்படி அமல்படுத்த மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இதனிடையே, மக்களவையில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் (என்ற பெயரில்), தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவையும் உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை விகிதாசார அடிப்படையில் 50 சதவிகிதத்தை உயர்த்தி 543 -லிருந்து 850 ஆக அதிகரிக்கும் முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு 273 இடங்கள் (33%) ஒதுக்கப்படும்.
மேலும், பட்டியலினத்தவருக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 84 தொகுதிகள் 134 ஆகவும், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 47 தொகுதிகள் 70 ஆகவும் உயரும். இதிலும் 33 சதவிகித தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
‘பெண் சக்திக்கு’ ஆதரவான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அரசமைப்பு சட்ட பிரிவுகள் 81 -ன்படி, மக்களவையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், அந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும், சட்டப் பிரிவு 82 -ன்படி, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகும், மாநிலங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
அதன்படி, 1952 ஆம் ஆண்டு 494 ஆக இருந்த மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1962 இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறைவடைந்து 522 ஆகவும், 1972 இல் 543 ஆகவும் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டது. கடைசியாகத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டபோது இந்திய மக்கள்தொகை 55 கோடி.
ஆனால், மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு கொள்கையைத் தென் மாநிலங்கள் முறையாகப் பின்பற்றின. ஆனால், வட மாநிலங்களில் தொடர்ந்து மக்கள்தொகை அதிகரித்து வந்துள்ளது.
தற்போது தொடர்ந்து மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், அது தென் மாநிலங்களுக்கு விதிக்கப்படும் தண்டனையாக அமையும் எனக் கருதி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை கூடாது என்று 1976 ஆம் ஆண்டு சட்ட பிரிவு 82 -ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2001 -லும் வட மாநிலங்களில் மக்கள்தொகை கட்டுக்குள் வராததால் மேலும் 25 ஆண்டுகள் சட்டத் திருத்தம் நீட்டிக்கப்பட்டது.
2021-ல் கரோனா காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு செய்யப்படவில்லை. தற்போதுதான் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனால், தற்போதும் தென் மாநிலங்களைப் போன்று, வட மாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தவில்லை. ஆகையால், மேலும் 25 ஆண்டுகள் தொகுதி மறுவரையறையைத் தள்ளிப் போடுவதே தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நீதியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
யாருக்கு சாதகம்?
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 இன்படி தொகுதி மறுவரையறை செய்யப்படும்பட்சத்தில், மக்களவையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் (சதவிகிதம்) தற்போது இருப்பதைவிட குறையும். ஆனால், ஹிந்தி பேசும் மாநிலங்களின் பிரதிநிதித்தும் (சதவிகிதம்) அதிகரிக்கும்.
தற்போது 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் அதிகபட்சமாக ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் 38.1%, தென் மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் 24.3% உள்ளனர்.
2011 மக்கள்தொகையின்படி, தொகுதி மறுவரையறை செய்யும் பட்சத்தில், ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு 76.8% உறுப்பினர்களும், தென் மாநிலங்களுக்கு 33.3% உறுப்பினர்களும், ஹிந்தி பேசாத வட மாநிலங்களுக்கு 58.3% உறுப்பினர்களும் கூடுதலாக கிடைப்பார்கள்.
மேலும், 850 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் உ.பி., பிகார் போன்ற ஹிந்தி பேசும் மாநிலங்களின் பிரதிநிதிகள் எண்ணிக்கை 43.1 சதவிகிதமாக உயரும். தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதிகள் எண்ணிக்கை முன்பைவிட 3.6 சதவிகிதம் குறைந்து 20.7 சதவிகிதமாகிவிடும்.
உத்தேசமாக உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகையானது தற்போது 25 கோடியாக இருக்கும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், தெலங்கானாவின் மக்கள்தொகைக்கு சமமாகும்.
இதேபோன்று, மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் 2050 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 200 ஆக உயரும் என்று அரசியல் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் மூலம், மக்களவையில் வட மாநிலங்களின் ஆதிக்கம் மேலும் மேலும் அதிகரிக்கும். அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களைக்கூட தென் மாநில பிரதிநிதிகள் ஆதரவு இல்லாமலேயே அவர்களால் எளிதில் நிறைவேற்றும் நிலை உருவாகும்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு ஏன்?
மகளிர் இடஒதுக்கீட்டுக்கு 100 சதவிகிதம் ஆதரவை தெரிவித்துள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அத்துடன் இணைத்து நிறைவேற்றத் திட்டமிடப்படும் மக்கள்தொகை மறுவரையறை திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.
மேலும், தற்போதைய மக்களவை எண்ணிக்கையான 543 -ல் இருந்தே மகளிருக்கான இடஒதுக்கீட்டை வழங்குங்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் கொள்கைபடி, குடும்பக் கட்டுப்பாட்டை முறையாக அமல்படுத்தி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சியடைந்த மாநிலங்களாக திகழும் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேலும், மக்களவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அது நாடாளுமன்ற செயல்திறனை பாதிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்ட கண்டன பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாட்டைப் பாதிக்கும் வகையிலோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கும் வகையிலோ எதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்கள் அனைவரும் அமைதியாக இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். தமிழ்நாடு முதல்வராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்று செவ்வாய்க்கிழமை (ஏப். 14) இறுதி எச்சரிக்கை எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (ஏப். 15) காலை மற்றொரு விடியோவை வெளியிட்ட மு.க. ஸ்டாலின், “மறுவரையறை மசோதா என்னும் கருப்புச் சட்டத்தை பற்றி விவாதிக்க நாடாளுமன்றம் நாளை கூடும் வேளையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி ஆங்கில ஊடகத்தில் எழுதிய கட்டுரையில், “மகளிர் இடஒதுக்கீட்டுக்காக சிறப்பு அமர்வு என்று மத்திய அரசு கூறுவது பொய். உண்மையான காரணம், தொகுதி மறுவரையறை மசோதா என்னும் ஆபத்து. 2027 மக்கள்தொகை கணக்கீட்டுக்கு முன்னதாக சட்டத்தை அமல்படுத்தி, இதர பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முறியடிப்பதே அவர்கள் நோக்கம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதல்வர்களும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தொகுதி மறுவரையறையைப் பற்றி பேசாமல், மகளிருக்கான இடஒதுக்கீட்டை வரவேற்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, 2027-ல் நடைபெறும் மக்கள்தொகை அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே, உடனடியாக அமல்படுத்துங்கள் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்த நிலையில், சுமார் 15 மாதங்களுக்கு மேலாக அமைதி காத்த பாஜக அரசு, தற்போது 2011 மக்கள்தொகை அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளதாக மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் அவசர அவசரமாக சிறப்பு அமர்வைக் கூட்டி, மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை திருத்த மசோதாக்கள் குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
மேலும், 2027 -ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்துவிடும், அதுவரை காத்திருக்காமல் 15 ஆண்டுகள் காலாவதியான 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உடனடியாக தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன்? என்றும் எதிர்க்கட்சிகள் கேள்விகளை முன்வைத்துள்ளன.
இந்த மசோதாக்களை நிறைவேற்ற அரசியலமைப்புத் திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம். இதற்கு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், மத்திய அரசுக்கு எதிா்க்கட்சிகளின் இசைவு கட்டாயம் தேவைப்படும்.
தற்போது காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தெரிவிக்கும் எதிர்ப்பை மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக மாற்றி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜக தலைவர்கள் களமாடத் தொடங்கிவிட்டார்கள்.
பசுத்தோல் (மகளிர் இடஒதுக்கீடு மசோதா) போர்த்திய புலியை (தொகுதி மறுவரையறை மசோதா) எதிர்க்கட்சிகள் எப்படி கையாளப் போகிறார்கள்?