தூணக்கடவில் இருந்து திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் திறப்பு
கோவை மாவட்டம், தூணக்கடவு அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு சனிக்கிழமை இரவு தண்ணீர் திறக்கப்பட்டது.
கோவை மாவட்டம், தூணக்கடவு அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு சனிக்கிழமை இரவு தண்ணீர் திறக்கப்பட்டது.
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தில் (பிஏபி) திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதல் மண்டல பாசனத்துக்கு வழங்க வேண்டிய இரண்டரை சுற்றுத் தண்ணீரில் தற்போதுவரை ஒன்றரை சுற்றுத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதியிலிருந்து முதல் மண்டலத்துக்கு ஒரு சுற்றுத் தண்ணீர் வழங்க வேண்டி பிஏபி அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், வரும் 27ஆம் தேதி முதல் திருமூர்த்தி அணையிலிருந்து முதல் மண்டலத்துக்கு ஒரு சுற்று தண்ணீர் வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
திருமூர்த்தி அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால், மழையால் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளில் இருந்து திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் கொண்டுவந்து, திருமூர்த்தி அணை விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து தூணக்கடவு அணைக்குத் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சர்க்கார்பதி மின்னுற்பத்தி நிலையத்தில், 20 மெ.வா. மின்சார உற்பத்தி செய்த பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சனிக்கிழமை இரவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 800 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.