கோயம்புத்தூர்

தனியார் நிறுவனத்தில்  ரூ. 6.20 கோடி மோசடி: மேலாளர், காசாளர் கைது

DIN

கோவையில் ரூ. 6.20 கோடி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 கோவை, கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன். இவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்த கண்ணன் (40) மேலாளராகவும், கருமத்தம்பட்டியைச் சேர்ந்த விவேக்குமார் (36) காசாளராகவும் பணியாற்றி வந்தனர்.
 நடராஜன் தனது தொழிலுக்காக தனியார் வங்கியில் ரூ.36 கோடி கடன் பெற்றிருந்தார். இதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.53 லட்சம் தவணை கட்ட வேண்டும். இந்நிலையில் நிறுவன மேலாளர் கண்ணன், காசாளர் விவேக்குமார் ஆகியோரிடம் தவணை கட்டும் பொறுப்பை நடராஜன் ஒப்படைத்துள்ளார். ஆனால், இருவரும் மாதந்தோறும் ரூ.53 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் ரூ.21.40 லட்சத்தை மட்டுமே செலுத்தி, மீதப் பணத்தைக் கட்டியது போல போலி ரசீது தயாரித்து நடராஜனிடம் அளித்துள்ளனர்.
 இந்நிலையில் மீண்டும் கடன் தேவைப்பட்ட காரணத்தால் நடராஜன் அதே வங்கியை அணுகியுள்ளார். ஆனால், தவணையை முறையாகச் செலுத்தாததால் மேலும் கடன் கொடுக்க முடியாது என வங்கி நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். இதையடுத்து நடராஜன், தனது வங்கிக் கணக்கை ஆய்வுசெய்தபோது, அதில் தனது ஊழியர்கள் கடனை முறையாகச் செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் கண்ணன், விவேக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் நடராஜன் புகார் அளித்தார். 
 அதில், "எனது நிறுவன மேலாளர், காசாளர் இணைந்து 2014ஆம் ஆண்டு முதல் 2019 மார்ச் மாதம் வரை இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் நான் கடன் பெற்ற தனியார் வங்கி மேலாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார். 
 இந்தப் புகாரை ஆய்வாளர் யமுனா தேவி, சார்பு ஆய்வாளர் அருண் ஆகியோர் விசாரித்தனர். விசாரணையில் மேலாளர் கண்ணன், காசாளர் விவேக்குமார் ஆகியோர் 2018 அக்டோபரில் இருந்து இதுவரை ரூ.6.20 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தனியார் வங்கி மேலாளருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT