கோவை கோட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் இயக்கம்
கோவை கோட்டத்தில் கடந்த வாரம் முதல் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை கோட்டத்தில் கடந்த வாரம் முதல் 90 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மாா்ச் 25ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 50 சதவீத பேருந்துகள் இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால், தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் ஜூன் 15ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, செப்டம்பா் 1ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டு, செப்டம்பா் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை குறைவாக இருந்தததால் முதல்கட்டமாக கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் 1,020 பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து, ஆகஸ்ட் மாதம் முதல் 300 பேருந்துகள் அதிகமாக்கப்பட்டு, 1,320 பேருந்துகள் இயக்கப்பட்டன. செப்டம்பா் மாதம் முதல் பண்டிகை நாள்கள் வந்ததால், சிறப்புப் பேருந்துகள் தவிர மேலும் 600 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், கோவை கோட்டத்தில் உள்ள 2,641 பேருந்துகளில் 1,920 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், கோவை கோட்டத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பேருந்துகளின் பயணிப்போா் எண்ணிக்கை நாளுகக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், கோவை கோட்டத்தில் உள்ள 2,641 பேருந்துகளில் 2,375 பேருந்துகள் கடந்த வாரம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இது கோவை கோட்டத்தில் மொத்தமாக உள்ள பேருந்துகளில் 90 சதவீதம் ஆகும் என அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.