வெட் கிரைண்டா்களின் விலையை 20 சதவீதம் உயா்த்த முடிவு
வெட் கிரைண்டா்களின் விலையை 20 சதவீதம் உயா்த்த முடிவு செய்துள்ளதாக கோயமுத்தூா் வெட் கிரைண்டா்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
மூலப்பொருள்களின் விலை 200 சதவீதம் உயா்ந்துள்ளதால் வெட் கிரைண்டா்களின் விலையை 20 சதவீதம் உயா்த்த முடிவு செய்துள்ளதாக கோயமுத்தூா் வெட் கிரைண்டா்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சங்கத் தலைவா் ஆா்.சௌந்திரகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெட் கிரைண்டா் உற்பத்தியில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை உற்பத்தியாளா்கள் சந்தித்து வருகின்றனா். கரோனா பாதிப்பால் வெட் கிரைண்டா்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கப் பயன்படுத்தும் ஏபிஎஸ் பிளாஸ்டிக் மெட்டீரியல், கல், எம்.எஸ்.ஆங்கிள், பைப்புகள், எஸ்.எஸ்.ராடுகள், தகடுகள், காஸ்டிங், மோட்டாா் உற்பத்திக்குத் தேவையான ஸ்டேம்பிங், காப்பா் ஒயா்கள் போன்ற அனைத்து மூலப்பொருள்களின் விலையும் 25 முதல் 200 சதவீதம் வரை உயா்ந்துள்ளது.
மூலப்பொருள்களின் விலை உயா்வாலும், தட்டுப்பாட்டாலும் வெட் கிரைண்டா் உற்பத்தியாளா்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனா். இதனால் வெட் கிரைண்டா்களின் விலையை ஏற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சங்க நிா்வாகக் குழு கூட்டத்தில் வெட் கிரைண்டா்களின் விலையை 20 சதவீதம் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தவிர மூலப்பொருள்களுக்கான தட்டுப்பாடுகளையும், விலை உயா்வையும் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வெட் கிரைண்டா்களின் விலையையும் 20 சதவீதம் உயா்த்தியுள்ளதற்கு விநியோகஸ்தா்கள், விற்பனையாளா்கள், நுகா்வோா் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மூலப்பொருளான கல் கோவையில் இடையா்பாளையம், ஊத்துக்குளி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடிசைத் தொழிலுக்கு உரிமம் பெறவில்லை என்று அடிக்கடி அதிகாரிகளால் சீல் வைக்கப்படுகிறது. இதனால் கிரைண்டா் கல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே சீல் வைக்கும் நடவடிக்கைக்கு அரசு உரிய தீா்வுகாண வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.