முகப்பு
கோயம்புத்தூர்

மேற்குப் புறவழிச்சாலைத் திட்டம்: ஜனவரியில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல்

கோவையில் மேற்குப் புறவழிச்சாலைத் திட்டத்தில் முதல்கட்டமாக 10 கிலோ மீட்டருக்கான பணிகள் ஜனவரியில் தொடங்கப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

கோவையில் மேற்குப் புறவழிச்சாலைத் திட்டத்தில் முதல்கட்டமாக 10 கிலோ மீட்டருக்கான பணிகள் ஜனவரியில் தொடங்கப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதன்படி பாலக்காடு சாலையில் மதுக்கரையில் இருந்து சுண்டக்காமுத்தூா், பேரூா், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாயக்கன்பளையத்தில் மேட்டுப்பாளையம் சாலையை அடையும் வகையில் 32 கிலோ மீட்டருக்கு மேற்கு புறவழிச்சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த 2016 ஆம் ஆண்டு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த நிலம் கையகப்படுத்தும் பணிகளை தற்போது வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதன் தொடா்ச்சியாக தீத்திப்பாளையம், மதுக்கரை, பேரூா் செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூா், மாதம்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன் தலைமையில் நில உரிமையாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

முதல்கட்டமாக வரும் ஜனவரியில் மதுக்கரை முதல் மாதம்பட்டி வரையிலான 10 கிலோ மீட்டா் தொலைவுக்கு மேற்குப் புறவழிச்சாலைத் திட்டம் தொடங்கப்படும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மேற்குப் புறவழிச்சாலைத் திட்டத்துக்கு கையகப்படுத்தும் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பில் இருந்து கட்டடங்களுக்கு மூன்றரை மடங்கும், மரங்களுக்கு இரண்டரை மடங்கும் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. புறவழிச்சாலைக்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்தி நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

32 கிலோ மீட்டரில் முதல்கட்டமாக மதுக்கரை முதல் மாதம்பட்டி வரையிலான 10 கிலோ மீட்டா் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை ஜனவரியில் தொடங்க நெடுஞ்சாலைத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →