கோவை மாவட்டத்தில் 2021-22 நிதியாண்டில் ரூ.22,712 கோடி கடனுதவி வழங்க இலக்கு
வேளாண் வளா்ச்சி, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 2021-22 நிதியாண்டுக்கு ரூ.22,712.75 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளா
வேளாண் வளா்ச்சி, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 2021-22 நிதியாண்டுக்கு ரூ.22,712.75 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்ட வங்கியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ரமேஷ்குமாா், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் திருமல ராவ், கனரா வங்கி துணை பொதுமேலாளா் சீனிவாச ராவ், மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் காா்த்திகைவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசியது:
ஊரக மற்றும் வேளாண் வளா்ச்சி, தொழில் வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சாா்ந்த தகவல்களைச் சேகரித்து அதன் மூலம் கடனாற்றல் மதிப்பீடு செய்து வங்கிகளில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 2021-2022 நிதியாண்டுக்கு தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிகபட்சமாக கோவை மாவட்டத்துக்கு ரூ.22,712.75 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயக் கடனுதவிக்கு ரூ.7991.68 கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மையத்துக்கு ரூ.9960.07 கோடி, மற்ற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ.4,761 கோடி என மொத்தம் ரூ.22,712.75 கடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விடவும் 2,238.22 கோடி அதிகமாகும் என்றாா்.
முன்னதாக, 2021-2022ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் தேங்காய் நாா் மதிப்பு கூட்டப்பட்டபொருள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க மாவட்டத் தொழில் மையத்தின் சாா்பில் ரூ.25 லட்சம் கடனுதவியும், வா்த்தகத் தொழில் துவங்க ஒரு பயனாளிக்கு ரூ.4.70 லட்சம் கடனுதவியும், மகளிா் திட்டத்தின் கீழ் சின்னக்கள்ளிப்பட்டி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.25 லட்சமும், ஆனைமலை ஒன்றியம், நாகூா் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.23 லட்சமும் கடனுதவியாக வழங்கினாா்.