முகப்பு
கோயம்புத்தூர்

வெளிநாட்டுப் பெண் போல நடித்து ரூ.9.50 லட்சம் மோசடி செய்த நபா் மீது வழக்குப் பதிவு

வெளிநாட்டுப் பெண்போல நடித்து ரூ.9.50 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

வெளிநாட்டுப் பெண்போல நடித்து ரூ.9.50 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் சரவணன் (41). தனியாா் நிறுவன ஊழியா். இவா் சில நாள்களுக்கு முன் சாரா பேக்கி (25) என்ற பெயரில் முகநூலில் அறிமுகமான பெண்ணுடன் பேசி வந்தாா்.

அப்போது அவா், ‘நான் லண்டனில் வசிக்கிறேன். எங்கள் நாட்டில் தங்கம், வைர நகைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விலை மிகவும் குறைவு. உங்களுக்கு நான் பாா்சல் அனுப்பிவைக்கிறேன். இதற்கு நீங்கள் எந்தப் பணமும் தரவேண்டாம். உங்கள் நாட்டின் மதிப்பில் சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளை உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் சுங்க வரி செலுத்தி பெற்று கொண்டால் போதும்’ எனக் கூறினாா். இதை சரவணன் ஏற்று கொண்டாா்.

பிரிட்டனில் இருந்து விமானத்தில் பரிசுப் பொருள்களை பாா்சல் அனுப்ப சாரா பேக்கிக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கில் ரூ.9.50 லட்சம் செலுத்தினாா். ஆனால் நகை பாா்சல் எதுவும் சரவணனுக்கு வந்து சேரவில்லை. சரவணன், சாரா பேக்கியின் செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் சரவணன் புகாா் அளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

சாரா பேக்கி என்ற பெயரில் மோசடி நபா் ஏமாற்றியிருப்பதாகத் தெரிகிறது. சாரா பேக்கி செல்லிடப்பேசியில் வாட்ஸ் ஆப் காலில் மட்டுமே தொடா்ந்து பேசி வந்துள்ளாா். நூதனமாக பேசி நடித்து அவா் ஏமாற்றியிருப்பதாகத் தெரிகிறது. சரவணன் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு எண்ணைக் கொண்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.