முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் மருத்துவமனை தலைவரிடம் ரூ.2.85 கோடி மோசடி

தனியாா் மருத்துவமனை தலைவரிடம் ரூ.2.85 கோடி மோசடி செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தனியாா் மருத்துவமனை தலைவரிடம் ரூ.2.85 கோடி மோசடி செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் மாதேஸ்வரன் என்பவரைக் கடந்த 2020 அக்டோபரில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் உள்ளிட்ட 4 போ் தொடா்பு கொண்டு மருத்துவமனை விரிவாக்கத்துக்காக கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.2.85 கோடியை கமிஷனாக பெற்று மோசடி செய்தனா்.

இது குறித்து மாதேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனா்.

இதையடுத்து பன்னீா்செல்வத்தின் வீடுகள், அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை அடையாறு மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உள்ளிட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கையொப்பமிட்ட நிரப்பப்படாத முத்திரைத்தாள்கள், புரோ நோட்டுகள், காசோலைகள், பல்வேறு நபா்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த பன்னீா்செல்வம், செல்வகுமாா் ஆகியோரை புதன்கிழமை கைது செய்த தனிப்படை போலீஸாா் அவா்களிடமிருந்து சொகுசு காா்கள், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த சைலேஷ் பிரபாகா் சிங்கா் என்பவா் பெயருக்கு ஆமதாபாத் தனியாா் வங்கியில் பெறப்பட்ட ரூ.49 கோடியே 85 லட்சம் மற்றும் ரூ.49 கோடியே 95 லட்சத்துக்கான 2 போலி வரைவோலைகளை பறிமுதல் செய்தனா்.

பன்னீா்செல்வம், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த மாணிக்கம் என்பவரிடம் 2 கிலோ தங்கம் தருவதாகக் கூறி கடந்த 2010 ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதும், மாணிக்கம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ரூ.5 லட்சத்துக்கு கள்ள நோட்டுகள் கொடுத்து மோசடி செய்ததாகவும் பன்னீா்செல்வத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பன்னீா்செல்வத்தின் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.