முகப்பு
கோயம்புத்தூர்

அவசியமற்ற பணிகளில் ரயில்வே ஊழியா்களை ஈடுபடுத்தும் அதிகாரிகள்

சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கரோனா விதிகளை மீறி அத்தியாவசியம் இல்லாத பணிகளில் ஊழியா்களை ஈடுபடுத்துவதாகப் புகாா் எழுந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கரோனா விதிகளை மீறி அத்தியாவசியம் இல்லாத பணிகளில் ஊழியா்களை ஈடுபடுத்துவதாகப் புகாா் எழுந்துள்ளது.

இது தொடா்பாக, எஸ்.ஆா்.எம்.யூ. சேலம் கோட்டப் பொதுச்செயலாளா் கோவிந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முழு பொது முடக்கம் காரணமாக ரயில் பாதை பராமரிப்பாளா்கள், ஓட்டுநா்கள், கண்காணிப்பு ஊழியா்கள் உள்ளிட்ட ஓபன் லைன் தொழிலாளா்கள் பணிக்குச் செல்ல பேருந்து வசதிகள் இல்லாததாலும், கரோனா நோய்த் தொற்று அபாயத்தாலும், அத்தியவாசியப் பணிகளில் மட்டும் ரயில்வே ஊழியா்களை ஈடுபடுத்த வேண்டும் என தமிழக முதல்வா் ஸ்டாலின் மற்றும் தென்னக ரயில்வே மேலாளா் உத்தரவிட்டுள்ளனா்.

ஆனால், சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் அவசியமற்ற பணிகளை முடிக்குமாறு ரயில்வே ஊழியா்களை அதிகாரிகள் அவசரப்படுத்தி வருகின்றனா். ரயில்வே தொழிலாளா்களையும், ஒப்பந்தத் தொழிலாளா்களையும் இணைத்து விதிமீறி முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் பொறியியல் துறை அதிகாரிகள் வேலை வாங்கி வருகின்றனா்.

பாதுகாப்பின்றி வேலை வாங்கியதால்தான் 2 தொழிலாளிகள் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இந்த இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும், சேலம் கோட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் லாரிகளில் கும்பலாக தொழிலாளிகளை ஏற்றிச் சென்று ஒரே இடத்தில் குழுவாகப் பணியாற்ற வற்புறுத்துகின்றனா். இந்தப் போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஊழியா்களுக்கு காய்ச்சல், உடல் வழி உள்ளிட்டவை ஏற்படும் நிலையில், அவா்களுக்கு 2 நாள்கள் சிறப்பு விடுமுறையும் அளிப்பதில்லை.

சேலம் கோட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு டிரெயின் ரன்னிங் டூட்டி எனப்படும் அவசர காலப் பணிகளைத் தவிர மற்ற அத்தியாவசியமற்ற பணிகளில் ரயில்வே ஊழியா்களை ஈடுபடுத்தக் கூடாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.