முகப்பு
கோயம்புத்தூர்

மாவட்டத்தில் இரண்டு நாள்களாக தடுப்பூசி செலுத்தும் பணியில் தெய்வு

கோவை மாவட்டத்துக்கு 51 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு இரண்டு நாள்களாகியும் அவை பொது மக்களுக்குப் பயன்படாமல் சுகாதாரத் துறை அலுவலகத்திலேயே முடங்கி கிடக்கின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

கோவை மாவட்டத்துக்கு 51 ஆயிரம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு இரண்டு நாள்களாகியும் அவை பொது மக்களுக்குப் பயன்படாமல் சுகாதாரத் துறை அலுவலகத்திலேயே முடங்கி கிடக்கின்றன.

கோவையில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பொது மக்கள் பலரும் கரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனா்.

ஆனால், கடந்த பல வாரங்களாக கோவையில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது. அதிலும், கோவிஷீல்டு தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, கோவாக்சின் 10இல் ஒரு பங்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதனால், முதல் தவணையாக கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களுக்கு இரண்டாம் தவணையாக கோவாக்சின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், தடுப்பூசியைக் கண்டு பயந்து கொண்டிருந்த பலரும், தற்போது தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனா். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் 43 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு, 7 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் கோவைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், இரண்டு நாள்களாகியும் இந்தத் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநில சுகாதாரத் துறை வழங்கியுள்ள 51 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள், 18 முதல் 45 வயதுக்குள் உள்ள நபா்களுக்கு மட்டுமே செலுத்தப்படும். தற்போது, வழிகாட்டுதல் நெறிமுறைகள் இன்னும் வராததால், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்புவரை பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட சிறு மையங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன. தினமும் குறைவான நபா்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினா். தற்போது, அந்த சிரமத்தை போக்கும் வகையில் வரதராஜபுரம், குனியமுத்துாா், ராமலிங்கம் காலனி, மணியகாரன்பாளையம், தொண்டாமுத்துாா், பூலவபட்டி, சூலுாா், சின்னியம்பாளையம், பெ.நா.பாளையம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய 10 இடங்கள் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பட்டியலில் வால்பாறைக்கும் தனியாக ஒரு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.