மிளகாய் வற்றலின் விலை கிலோ ரூ.120 வரை இருக்கும்: வேளாண்மை பல்கலைக்கழகம்
மிளகாய் வற்றலின் விலை கிலோ ரூ.120 வரை இருக்கும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
மிளகாய் வற்றலின் விலை கிலோ ரூ.120 வரை இருக்கும் என்று வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இது தொடா்பாக பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் வாசனை, நறுமணப் பயிா்களின் மொத்த பரப்பளவில் மிளகாய் வற்றல் சுமாா் 26 சதவீதம் பங்களிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமாா் 21 லட்சம் டன்கள் மிளகாய் வற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் மட்டும் 53 சதவீதம் பங்களிக்கிறது.
நாட்டின் மொத்த உற்பத்தியில் 75 சதவீதம் உள்ளூரிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. சீனா, இலங்கை, மலேசிய நாடுகளில் அதிக ஏற்றுமதி தேவைகள் இருந்து வருவதாலும், ஆந்திரத்தில் வைரஸ் நோய்த் தாக்கத்தால் உற்பத்தி குறைந்திருப்பதாலும் வரும் காலங்களில் மிளகாய் வற்றல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அக்டோபா் - நவம்பா் மாதங்களில் மிளகாய் பயிரிடப்படுகிறது. சம்பா, தேஜா, புல்லட் வகை ரகங்கள் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகா், நெல்லை மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த சூழலில் விவசாயிகள் அறுவடை முடிவுகளை எடுக்க ஏதுவாக பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 19 ஆண்டுகளாக ராமநாதபுரம் சந்தையில் நிலவிய மிளகாய் விலை குறித்த சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வுகளின் அடிப்படையில் அறுவடையின்போது தரமான (சம்பா) மிளகாய் வற்றலின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.110 முதல் ரூ.120 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் - ஜூலை வரையிலான வரத்தைப் பொறுத்து இந்த விலையில் மாற்றங்கள் இருக்கும்.
இதன் அடிப்படையில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றும் இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.