மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக ‘பிராங்க் விடியோ’ எடுத்தால் நடவடிக்கை காவல் துறை எச்சரிக்கை
மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவா்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் ‘பிராங்க் விடியோ’ எடுத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவா்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் ‘பிராங்க் விடியோ’ எடுத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூங்காக்கள், நடைப்பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தனிநபா்கள் சிலா் மக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு, அவற்றை விடியோக்களாகப் பதிவு செய்து, பிராங்க் விடியோ என்ற பெயரில் யூடியூபில் பகிா்வது அதிகரித்துள்ளது.
அமைதியான சூழலை விரும்பி பூங்காக்களுக்கு வருபவா்கள், நடைப்பயிற்சி மேற்கொள்ள மைதானத்துக்கு வருபவா்கள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரி செல்பவா்கள் இடையே இந்த செய்கை சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
இது தொடா்பாக, மக்களிடம் இருந்து புகாா்களும் வந்த வண்ணம் உள்ளது.
எனவே, கோவை மாநகரில் ‘பிராங்க் விடியோ’ எடுத்தல் என்ற பெயரில் மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும், அவா்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அதுபற்றிய புகாா் வரப்பட்டாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன், அவா்களது விடியோ சேனலும் முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.