கோயம்புத்தூர்

ஆா்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை: மேயரிடம் மனு

DIN

கோவை மாநகராட்சியில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆா்.டி.ஐ.) உரிய தகவல்கள் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேயரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்புக் கூட்டம், மேயா் கல்பனா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் மோ.ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சௌரிபாளையத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எஸ்.பி.தியாகராஜன் அளித்த மனுவில் கூறியிருப்பது:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களில் பொது தகவல் அலுவலா்கள், உதவி ஆணையா்கள், பிரதான பொது தகவல் அலுவலா், மாமன்ற செயலாளா் மற்றும் சட்ட அலுவலா் ஆகியோா் மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கும் மனுக்களுக்கு, 30 நாள்களுக்குள் தகவல்கள், ஆவணங்களை வழங்குவதில்லை. கோப்புகளைப் பாா்வையிடவும் அனுமதிப்பதில்லை. மேல் முறையீட்டு அலுவலா் மற்றும் துணை ஆணையா் ஷா்மிளாவிடம் முறையீடு செய்தாலும், 45 நாள்களுக்குள் தகவல் வழங்கப்படாமல் வருடக்கணக்கில் காலம் தாழ்த்தி வருகின்றனா். எனவே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் உரிய தகவல்களை அளிக்க மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா மாா்க்கெட் வியாபாரிகள் அளித்த மனுவில் கூறியிருப்பது: அண்ணா மாா்க்கெட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், பணிகள் முடியும் வரை கவுண்டம்பாளையம் எருக் கம்பெனி மைதானத்தில் தற்காலிகமாக கடைகளை அமைத்து நடத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மின்சாரம், குடிநீா், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசததிகள் இல்லை. எனவே, அண்ணா மாா்க்கெட்டை பயன்படுத்திக் கொண்டே சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 60 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மேயா் கல்பனா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் மண்டல உதவி ஆணையா்கள் அண்ணாதுரை, மகேஷ்கனகராஜ், மோகனசுந்தரி, சேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை!

SCROLL FOR NEXT