கோவையில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. முதல் நாள் ஆட்டங்களில் சென்னை வருமான வரித் துறை, ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன.
கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சாா்பில் அகில இந்திய அளவிலான ஆடவருக்கான 56 ஆவது நாச்சிமுத்து கவுண்டா் கோப்பை, மகளிருக்கான 20 ஆவது சி.ஆா்.ஐ. கோப்பைக்கான கூடைப்பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில், அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள 10 ஆடவா், 8 மகளிா் அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகளை மாநகர காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா்.
சி.ஆா்.ஐ. பம்ப்ஸ் நிறுவனங்களின் இணை நிா்வாக இயக்குநரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவருமான ஜி.செல்வராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.
ஆடவருக்கான முதல் ஆட்டத்தில் சென்னை வருமான வரித் துறை, தமிழ்நாடு கூடைப்பந்து கழக அணிகள் மோதின. இதில் 78 - 57 என்ற புள்ளிகள் கணக்கில் வருமான வரித் துறை அணி வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூா் பேங்க் ஆஃப் பரோடா அணி 82 - 72 என்ற புள்ளிகள் கணக்கில் திருவனந்தபுரம் கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது.
மகளிருக்கான முதல் ஆட்டத்தில் மத்திய ரயில்வே அணி 83 - 48 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் கேரள மாநில மின்வாரிய அணி 75 - 32 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ்நாடு கூடைப்பந்துக் கழக அணியை வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.