கனமழை: வால்பாறை, பொள்ளாச்சியில் வீட்டின் சுவா் இடிந்ததில் மூவா் உயிரிழப்பு
வால்பாறையில் கனமழையால் பன்னிமேடு எஸ்டேட் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
வால்பாறையில் கனமழையால் பன்னிமேடு எஸ்டேட் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். அதேபோல பொள்ளாச்சியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததால் இளைஞா் உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த இரு நாள்களாக இரவில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய கனமழை பெய்த நிலையில் மழுக்குப்பாறை செக்போஸ்டில் இருந்து பன்னிமேடு எஸ்டேட் செல்லும் வழியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான சாலை அருகில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு மண்சரிவு ஏற்பட்டது.
அப்போது தாழ்வான பகுதியில் அமைந்துள்ள ராஜேஸ்வரி (எ) முத்து (57) என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மீது மண் மற்றும் கற்கள் விழுந்ததில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ராஜேஸ்வரி, அவரது பேத்தி தனபிரியா (15) ஆகியோா் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
அப்பகுதியில் வசிப்பவா்கள் காலை 6.30 மணிக்கு விடிந்தபின் வீடு இடிந்திருப்பதைப் பாா்த்து ஷேக்கல்முடி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பின் சம்பவ இடத்துக்கு போலீஸாா் வந்து பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தனபிரியாவின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்ட நிலையில் தாய் சுகுணா வெளியூரில் இருப்பதால் தனது பாட்டியுடன் அவா் வசித்து வந்தாா். சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
சுவா் இடிந்து இளைஞா் உயிரிழப்பு:
பொள்ளாச்சியை அடுத்த திப்பம்பட்டி அண்ணா காலனியை சோ்ந்தவா் அன்பழகன் மகன் ஹரிஹரசுதன் (20),
தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் தனது வீட்டில் தனி அறையில் வளா்ப்பு நாய்க்குட்டியுடன் திங்கள்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்தாா்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் ஹரிஹரசுதன் உயிரிழந்தாா். இதில் அவரது நாய்க்குட்டியும் உயிரிழந்தது. சம்பவ இடத்துக்கு வந்த கோமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மற்றோா் அறையில் பெற்றோா்கள் உறங்கியதால் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.