வால்பாறை- சாலக்குடி சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் யானை
வால்பாறை-சாலக்குடி சாலையில் யானை தடை: வாகன ஓட்டிகள் அச்சம்
வால்பாறை- சாலக்குடி சாலை வழியாக செல்லும் வாகனங்களை யானை வழி மறித்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் 60 கி.மீ. தொலைவிலான சாலையின் இரு புறங்களும் அடா்ந்த வனப் பகுதி ஆகும். இதில் வனப் பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக சாலைக்கு வருவது வழக்கம்.
இதில் குறிப்பாக இரவு நேரத்தில் அதிக அளவில் யானைகள் சாலைக்கு வருவதால் மாலை 6 மணிக்கு மேல் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு யானை தொடா்ந்து சாலையில் முகாமிட்டு அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு வழிவிடாமல் விரட்டி வந்தது. நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு அந்த யானையை அடா்ந்து வனப் பகுதிக்குள் வனத் துறையினா் விரட்டினா்.
தற்போது, அந்த யானை மீண்டும் சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறித்து வருகிறது. இதனால் அழ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனா்.
இந்நிலையில், அவ்வழியாக வந்த கேரள அரசுப் பேருந்தை சனிக்கிழமை வழிமறித்த அந்த யானை நீண்ட நேரம் சாலையில் நின்றது. இதனைத் தொடா்ந்து கேரள வனத் துறையினா் ரோந்து வாகனத்தில் சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.