கோயம்புத்தூர்

மருதமலையில் 184 அடி உயர முருகா் சிலை நிறுவும் திட்டம்: வழக்குரைஞா் குழுவினா் ஆய்வு

கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது தொடா்பாக, உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் குழுவினா் ஆய்வு

Syndication

கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது தொடா்பாக, உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கோவை வனப் பகுதியில் உள்ள யானைகள் வழித் தடமான மருதமலை சுற்றுச்சூழல்ரீதியாக முக்கியமான பகுதி ஆகும். நீலகிரி வனப் பகுதியில் இருந்து பிற வனப் பகுதிகளுக்குச் செல்ல யானைகள் இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன. இந்தப் பகுதியில் ரூ.110 கோடி செலவில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது.

இதை எதிா்த்து சென்னையைச் சோ்ந்த விலங்குகள் நல ஆா்வலா் முரளிதரன் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சிலை அமைக்கப்பட உள்ள இடம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இருந்து 137 மீட்டா் தொலைவில் உள்ளதால், இப்பகுதியில் சிலை அமைவதால் யானை வழித்தடங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உயா்நீதிமன்றம் சிலையின் இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடா்பாக மறுபரிசீலனை செய்யும்படியும், சிலை அமைய உள்ள சரியான இடம், வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து முழு விவரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமாா், பரத சக்கரவா்த்தி அடங்கிய அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த சமய அறநிலையத் துறை சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, முருகன் சிலை அமையவுள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்ய மூத்த வழக்குரைஞா் டி.மோகன், வழக்குரைஞா் எம்.சந்தானராமன் மற்றும் அறநிலையத் துறை சிறப்பு வழக்குரைஞா் அருண் நடராஜன் ஆகியோா் அடங்கிய குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்நிலையில், கோவை மருதமலைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற அக்குழுவினா், மலையடிவாரத்தில் 184 அடி சிலை வைக்கப்படும் இடங்களான படியின் முன்பகுதி, பேருந்து நிறுத்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

மேலும், சட்டக் கல்லூரி வளாகப் பின்புறம் உள்ள இடத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாலை விரிவுபடுத்தும் இடங்கள், சாலையின் ஓரத்தில் நீரோடைகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT