சென்னிமலை ஒன்றியத்தில் குறை கேட்பு முகாம்
சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈங்கூர், பனியம்பள்ளி, வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தம்பாளையம், சிறுகளஞ்சி ஆகிய 6 ஊராட்சி மக்களிடம், குறை கேட்பு முகாம் வாய்ப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈங்கூர், பனியம்பள்ளி, வாய்ப்பாடி, வரப்பாளையம், கூத்தம்பாளையம், சிறுகளஞ்சி ஆகிய 6 ஊராட்சி மக்களிடம், குறை கேட்பு முகாம் வாய்ப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார் அவர் பேசியதாவது:
இப்பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். கால்நடை வளர்ப்போர் நாட்டு மாடுகளை அதிக அளவில் வளர்த்திட வேண்டும். அவை குறைந்த அளவே தீவனம் எடுத்துக் கொண்டு, அதிக சத்துக்கள் அடங்கிய பாலினை அளிக்கக் கூடியவை.
பொதுமக்கள் அனைவரும் அவசியம் கழிப்பறையை வீடுகளில் அமைத்துப் பயன்படுத்திட வேண்டும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்காமல் காப்பதோடு, நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.
பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பொதுமக்களிடம் இருந்துக் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அவர் பேசுகையில், விரைவில், கொடிவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், அத்திக்கடவு -அவிநாசி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக, இங்குள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக் கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 250-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
முன்னதாக, பெருந்துறை, பவானி சாலை, ஆசிரியர் குடியிருப்பு அருகில், பல்வேறு வகையான 150 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியரும் பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினரும் துவக்கி வைத்தனர்.
ஈரோடு கோட்டாட்சியர் (பொ) சி.ஜெயராமன், பெருந்துறை வட்டாட்சியர் வீரலட்சுமி, பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.