வீட்டுமனை பட்டா கேட்டு சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தை 150க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூா், பனையம்பள்ளி, மாதம்பாளையம், ஜெ.ஜெ.நகா் உள்ளிட்ட பகுதிகளில் கூலி தொழிலாளா்கள் அதிக அளவில் வசிக்கின்றனா். இவா்கள் நீண்ட நாள்களாக வீட்டு மனை பட்டா கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா். இதுவரை இப்பகுதி மக்களின் கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நல்லூா், பனையம்பள்ளி, மாதம்பாளையம் பகுதிகளைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்டோா் கோரிக்கை மனுவுடன் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பவானிசாகா் சிபிஎம் ஒன்றியச் செயலாளா் டி.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற முற்றுகையில், 150க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, அங்கு வந்த சத்தியமங்கலம் போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தினா். பின்னா், கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட வருவாய்த் துறையினா் வீட்டுமனை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.