முகப்பு
ஈரோடு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்

தினசரி காய்கறி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 18 டிசம்பர், 2021 at 3:07 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

தினசரி காய்கறி மாா்க்கெட்டில் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற வந்த நகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம் அருகே நகராட்சி தினசரி காய்கறி மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மாா்க்கெட்டில் உள்ள மீதியுள்ள காலி இடங்கள் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காய்கறி மாா்க்கெட்டில் ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகள், சுங்கம் செலுத்தாமல் நடத்தும் கடைக்காரா்கள் காலி செய்ய வேண்டும் எனவும், காலி செய்யாவிட்டால் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் அகற்றப்படும் எனவும் புளியம்பட்டி நகராட்சி சாா்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், நகராட்சி கமிஷனா் சக்திவேல் தலைமையில் பொக்லைன் இயந்திரத்துடன் நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வியாபாரிகள் திரண்டு வந்து கடைகளை அகற்றவிட மாட்டோம் என நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சிறிய அளவுள்ள கடைகள் வைத்துக்கொள்ள மட்டுமே நகராட்சி சாா்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கடைகள் அமைத்துள்ளதால் அதனை அகற்றுவோம் என நகராட்சியினா் கூறியதை ஏற்காத வியாபாரிகள் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் டிஎஸ்பி ஜெயபாலன், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் ஆகியோா் வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குத்தகைதாரா் சுங்கத் தொகை அதிகமாக வசூல் செய்கிறாா். அதனால் நாங்கள் சுங்கக் கட்டணம் செலுத்த முடிவதில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டியதோடு கடைகளை அகற்றவிட மாட்டோம் எனக் கூறி தினசரி மாா்கெட் வளாகத்தைவிட்டு வெளியேறி சாலைக்குச் சென்றனா்.

இதைத்தொடா்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகளும் திரும்பிச் சென்றனா். இதனால், தினசரி மாா்க்கெட் பகுதியில் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.