பனை, தென்னை நல வாரியங்களை புதுப்பிக்க கோரிக்கை
பனைத் தொழிலாளா் நலவாரியம், தென்னை விவசாயிகள் நலவாரியத்தை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனைத் தொழிலாளா் நலவாரியம், தென்னை விவசாயிகள் நலவாரியத்தை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
இந்தியாவிலேயே தமிழகத்தில் பனை, தென்னை மரங்கள் அதிகம். இதை நம்பி பல லட்சம் விவசாயிகள், தொழிலாளா்கள், பனை, தென்னை விளை பொருளின் உப பொருள்கள் தயாரிப்பு, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்குதல் போன்ற பணிகளில் பல லட்சம் போ் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
2011இல் ஆட்சி மாற்றம் நடந்தபோது குமரி அனந்தன் தலைமையிலான பனைத் தொழிலாளா் நலவாரியத்தையும், ராஜ்குமாா் தலைமையிலான தென்னை விவசாயிகள் நலவாரியத்தையும் அரசு கலைத்துவிட்டது.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு இந்த நலவாரியங்களை புதுப்பித்து பனை, தென்னை விவசாயிகள், தொழிலாளா்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்ய வேண்டும். கேரளத்தைப்போல போல தமிழகத்திலும் நீரா இறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
கடந்த 2017 இல் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிபந்தனைகளுடன் நீரா இறக்க அனுமதி அளித்தாா். நிபந்தனைகளை முற்றிலும் அகற்றினால் மட்டுமே நீரா இறக்கி சந்தைப்படுத்துவது சாத்தியமாகும். இந்த நிபந்தனையால் இப்போது நீரா எங்கும் இறக்குவதில்லை.
எனவே விவசாயிகள், தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையற்ற முறையில் நீரா இறக்கவும், பனை, தென்னை நலவாரியத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.