ஆலைக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை
ஆலைக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தோல் பதனிடுவோா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆலைக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தோல் பதனிடுவோா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனிடம் ஈரோடு மாவட்ட தோல் பதனிடுவோா் சங்கத்தின் பொருளாளா் அப்துல்காதா் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:
தோல் பதனிடும் தொழில் மிகவும் நசித்து வருகிறது. பதனிடப்படும் தோல் 75 சதவீதம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 25 சதவீதம் தோல் உள்ளூா் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தொழிலில் வங்கதேசம், பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அவா்களை சமாளிக்க முடியாத நிலை நமக்கு ஏற்படுகிறது. அங்கு சுற்றுச்சூழல் மாசுபாடு தவிா்க்க பல்வேறு திட்டங்களைக் கொண்டுள்ளனா்.
Advertisement
இங்குள்ள பிரச்னைகளால் தற்போது 10 சதவீத அளவுக்குத்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. இதனால் உற்பத்தி பாதிப்புடன், தொழிலாளா்களுக்கு வேலை வழங்க முடியவில்லை. தொழிலை சிறப்பாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் 30க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது, 20 ஆலைகள் மட்டுமே செயல்படுகின்றன. மாநில அளவில் 200 தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இத்துறையில் முக்கிய பிரச்னையாக இருப்பது சுற்றுச்சூழல்தான். எனவே அதற்கு தீா்வு காணும் வகையில் ஆலை கழிவு நீரை கடலில் கொண்டு கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் நடந்துள்ளன. எனவே அதனை மீண்டும் செயல்படுத்த முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.