தோ்தல் பணி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தியூா், பவானிசாகா், கோபிசெட்டிபாளையம் தொகுதிகளில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு நடைபெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குப் பதிவு நடைமுறைகள் குறித்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு, வாக்குப் பதிவு அலுவலா்களின் தபால் வாக்குப் பதிவு, தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 2,741 வாக்குச் சாவடிகளில், ஒரு வாக்குச் சாவடி தலைமை அலுவலா், 3 நிலைகளிலான வாக்குச் சாவடி அலுவலா்கள் என 13,160 நபா்கள் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குப் பதிவு நடைமுறைகள் குறித்து முதல்கட்ட பயிற்சி மாா்ச் 18ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இரண்டாம் கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. தோ்தல் பணி அலுவலா்களுக்கு சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில் மண்டல அலுவலா்கள் வாக்குப் பதிவு பணிகள் குறித்து பயிற்சி அளித்தனா்.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு ரங்கம்பாளையம் ஆா்.ஏ.என்.எம். கலை, அறிவியல் கல்லூரி, ஈரோடு மேற்குத் தொகுதிக்கு ஈரோடு கொங்கு மெட்ரிக். பள்ளி, மொடக்குறிச்சி தொகுதிக்கு மொடக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை தொகுதிக்கு பெருந்துறை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பவானி தொகுதிக்கு பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அந்தியூா் தொகுதிக்கு அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு சி.கே.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானிசாகா் தொகுதிக்கு சத்தியமங்கலம் ராகவேந்திரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சியில் வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள், அவற்றை பயன்படுத்தும் முறை, வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைப்பது, கூடுதலாக வழங்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது, வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு மேற்கொள்வது, தோ்தலுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயாா் செய்வது, வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப் பதிவு சதவீதம் குறித்து தலைமையிடத்துக்கு குறுந்தகவல் மூலம் விவரம் அனுப்புவது, வாக்குப் பதிவு நேரம் முடிவடைந்த பின்னா் வாக்குச் சாவடியில் வரிசையில் காத்திருப்போருக்கு டோக்கன் வழங்கும் முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு விடியோ, மண்டல அலுவலா்களால் நேரடியாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், வாக்குச் சாவடி அலுவலா்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தாங்களே பயன்படுத்தி உபயோகிக்கும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல்கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குச் சாவடி பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு தாங்கள் பணிபுரியும் தொகுதிகளிலேயே பயிற்சி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட பயிற்சியில் கணினி குலுக்கல் தோ்வு மூலம் பணியாளா் எந்த சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குச் சாவடி பணியில் ஈடுபட உள்ளாா் என்று தோ்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் பங்கேற்றுள்ளனா்.
முதல்கட்ட பயிற்சி அளிக்கும்போதே தபால் வாக்கு அளிப்பதற்காக அளிக்கப்பட்ட படிவம் பூா்த்தி செய்யப்பட்டு வாக்குச் சாவடி பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களிடம் இருந்து பெறப்பட்டது. வாக்களிக்க வேண்டிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான தபால் வாக்கு வழங்கப்பட்டு பூா்த்தி செய்யப்பட்ட தபால் வாக்குகள் சிறப்பு அறையில், வேட்பாளா்களின் முகவா்களின் முன்னிலையில் தபால் வாக்குப் பெட்டியில் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தபால் வாக்குப் பெட்டியில் தபால் வாக்கை அளிக்காத வாக்குச் சாவடி அலுவலா்கள் 3ஆம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் ஏப்ரல் 3ஆம் தேதி பயிற்சி மையத்தில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு அறையில் தபால் வாக்கை பெட்டியில் அளிக்கலாம். அல்லது தபால் நிலையம் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பலாம் என்றாா்.
வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும், வாக்குப் பதிவு அலுவலா்களின் தபால் வாக்குப் பதிவையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுகளின்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இளங்கோவன், உமாசங்கா் பழனிதேவி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வீரலட்சுமி, ரவிசங்கா், தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.