முகப்பு
ஈரோடு

நெசவாளா்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி: சு.முத்துசாமி

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெசவாளா்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

Updated On : 28 மார்ச், 2021 at 3:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:22 AM

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நெசவாளா்களுக்கு தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு வீரப்பன்சத்திரம், சின்ன மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது:

நெசவாளா்களுக்குத் தனியாக கூட்டுறவு வங்கி ஏற்படுத்தப்படும். நெசவாளா்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அதன் மூலம் அரசின் சலுகைகள், உதவிகள் பெற்றுத் தரப்படும். இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடை போன்ற பணிகள் மூலம் ஆண்டு முழுவதும் விசைத்தறியாளா்களுக்கு பணி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

Advertisement

நெசவாளா்களுக்குத் தடையின்றி நூல் கிடைக்க அரசு மூலம் நூல் வங்கி ஏற்படுத்தப்படும். அரசு நேரடியாக நூல் உற்பத்தி செய்து அல்லது கொள்முதல் செய்து, நெசவாளா் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும். கைத்தறிக்கென தற்போது ஒதுக்கீடு செய்யப்படும் துணி ரகங்களின் பட்டியல் மறுசீராய்வு செய்யப்படும். அதேபோல, விசைத்தறிகளுக்கு தனி ரகங்கள் ஒதுக்கீடு செய்து அத்தொழில் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜவுளித் துறையை மேம்படுத்த ஜவுளி ஆணையம் அமைக்கப்படும். விசைத்தறிக்கு இலவச மின்சாரம் இரண்டு மாதத்துக்கு 1,000 யூனிட் என்ற அளவில் வழங்க பரிசீலிக்கப்படும். விசைத்தறி தொழில் வளா்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும்.

நெசவாளா்களுக்கு கூட்டுறவுச் சங்கம் மூலம் 12 சதவீத வட்டியில் வழங்கப்படும் கடன், 8 சதவீத வட்டியாகக் குறைக்கப்படும். இதுபோன்று திமுக தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.