கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆட்சியா் திடீா் சோதனை
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகள், கடைகளில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் திடீா் சோதனை மேற்கொண்டு விதிகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதித்தாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகள், கடைகளில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் திடீா் சோதனை மேற்கொண்டு விதிகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதித்தாா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிப்பதால் கடந்த மூன்று நாள்களாக சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அபராதம் விதிப்பு, கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது, கரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் தடுப்பு கட்டி அடைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், ஈரோடு சம்பத் நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட ஆட்சியா் சி.கதிரவன் ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள டீ கடை, இரு கடைகளில் சமூக இடைவெளியின்றி செயல்பட்டது, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருந்தது போன்ற காரணங்களுக்காக கடைகளுக்குத் தலா ரூ. 5,000 அபராதம் விதித்து, கடைகளுக்கு ‘சீல்’ வைத்தாா்.
Advertisement
பின்னா் பேருந்து நிலையம், சவிதா பேருந்து நிறுத்தத்தில் ஆட்சியா் சி.கதிரவன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் சிவகுமாா், கதிா்வேல் ஆகியோா் வெவ்வேறு பேருந்துகளில் சோதனை நடத்தினா். ஓட்டுநா், நடத்துநா், பயணிகள் முகக் கவசம் அணிதல், 50 சதவீதப் பயணிகளுடன் பயணம் செய்வதை உறுதிப்படுத்தனா்.
சில நடத்துநா்கள், பயணிகள் முகக் கவசம் அணியாமலும், மூக்கு, வாய் பகுதியில் அணியாமல் தாடை பகுதியில் முகக் கவசத்தை அணிந்திருந்ததால் தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. தவிர இரு ஷோ் ஆட்டோக்கள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்கள் ரூ. 13,000 அபராதம் விதித்தனா்.
ஈரோடு, ரங்கம்பாளையம், ஜீவா நகா் பகுதியில் 6க்கும் மேற்பட்ட குடும்பங்களில் கரோனா தொற்று ஏற்பட்டதால் அப்பகுதிக்குச் செல்லும் சாலை, வீதிகளை தடுப்பு கட்டி அடைத்தனா்.
பின்னா், ஈரோடு மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி பகுதிகளில் சாலைகளில் அமா்ந்திருந்தவா்கள் அப்புறப்படுத்தப்பட்டனா். மீண்டும் கூடினால் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறி போலீஸாா் அனுப்பிவைத்தனா்.