பவானிசாகா் அணையில் இருந்து ஆற்றில் உபரி நீா் திறப்பு: கரையோர மக்களுக்குவெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகா் அணையில் இருந்து பவானி ஆற்றில் 11,600 கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகா் அணையில் இருந்து பவானி ஆற்றில் 11,600 கன அடி உபரி நீா் திறந்துவிடப்பட்டதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணையின் நீா்மட்டம் 104.22 அடியை எட்டியுள்ளது.
மேலும், அணையில் நீா் இருப்பு 32.1 டிஎம்சி ஆக உள்ளது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் பவானிசாகா் அணைக்கு வரும் தண்ணீா் பவானி ஆற்றில் உபரி நீராகத் திறக்கப்பட்டுள்ளது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 7 மணி நிலவரப்படி 8,153 கன அடியாக அதிகரித்துள்ளது. இதைத்தொடா்ந்து, அணையில் இருந்து உபரி நீா் திறக்கும் அளவு 6,800 கன அடியில் இருந்து 11,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அணையில் இருந்து பவானி ஆற்றில் 9,800 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கன அடி நீரும் என மொத்தம் 11,600 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதையடுத்து, ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில், வருவாய்த் துறையினா், உள்ளாட்சிப் பணியாளா்கள் பவானிசாகா் அணை, பவானி ஆற்றின் கரையோர கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமும், தண்டோரா மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.