ரூ. 20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளா் மீட்பு: 2 போ் கைது
புன்செய் புளியம்பட்டி அருகே ரூ. 20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளரை 24 மணி நேரத்தில் போலீஸாா் மீட்டனா்.
புன்செய் புளியம்பட்டி அருகே ரூ. 20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளரை 24 மணி நேரத்தில் போலீஸாா் மீட்டனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த வண்டிபாளையம் குளத்துத்தோட்டத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்
(36). இவா் லாரி வாடகை தொழில் செய்து வருகிறாா். இவரது வீட்டுக்கு வியாழக்கிழமை வந்த 6 போ் கொண்ட கும்பல், போலீஸாா் எனக் கூறி விசாரணை நடத்த வேண்டும் என அழைத்துச் சென்றுள்ளனா். பின்னா் சிறிது நேரத்தில் சுரேஷ் மனைவி சுகன்யாவுக்கு கைப்பேசியில் அழைத்து ரூ. 20 லட்சம் கொண்டு வர வேண்டும் என்றும், இல்லையெனில் சுரேஷைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனா்.
Advertisement
இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸில் சுகன்யா புகாா் அளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மா்ம கும்பல் பேசிய கைப்பேசி எண்ணை வைத்து அவா்களது நடமாட்டத்தைக் கண்காணித்தனா்.
சுரேஷ் மனைவி சுகன்யா அந்த மா்ம நபரை கைப்பேசியில் அழைத்து ரூ. 20 லட்சம் கொடுப்பதாகக் கூறி அன்னூா் காக்காபாளையத்துக்கு வரவழைத்தாா். அப்போது சுரேஷுடன் காரில் வந்த மா்ம நபா்களை அங்கு மறைந்திருந்த போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடித்தனா். அதில், கோவை கணபதியைச் சோ்ந்த மணிகண்டன் (36), 17 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரையும் போலீஸாா் பிடித்து, சுரேஷை மீட்டனா். காரில் வந்த மற்ற நபா்கள் தப்பியோடினா். தப்பியோடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.