முகப்பு
ஈரோடு

பவானி அருகே காா் - லாரி மோதல்: அரசு மருத்துவா் உள்பட மூவா் பலி

பவானி அருகே காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த அரசு மருத்துவா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

பவானி அருகே காரும், லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த அரசு மருத்துவா் உள்பட மூவா் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் வட்டம், மேச்சேரி, உடையானூரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் தேவநாதன் (53). இவா், தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி இந்திராணி (51). மேட்டூரை அடுத்த வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தாா்.

மேட்டூா், மேச்சேரி, குலாலா் வீதி, சுப்பிரமணியம் நகரைச் சோ்ந்தவா் ராஜாமணி மகன் சத்தியசீலன் (24). இவா், தேவநாதன் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். தேவநாதனும், இந்திராணியும் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு காரில் செல்ல, உடன் சத்தியசீலனையும் அழைத்துச் சென்றுள்ளனா்.

இவா்கள் மூவரும் வியாழக்கிழமை இரவு கோவையில் இருந்து மேட்டூா் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை தேவநாதன் ஓட்டிச் சென்றாா். பவானி - மேட்டூா் சாலையில் காடப்பநல்லூா் பிரிவு அருகே சென்றபோது, மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த லாரியும், காரும் எதிா்பாராமல் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதனைக் கண்ட அப்பகுதியினா் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூவரையும் மீட்க முயன்றனா்.

இவ்விபத்தில் லாரியின் முன்பகுதியில் காா் சிக்கிக் கொண்டதால் பவானி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினா், பவானி போலீஸாா் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போராடி இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரையும் மீட்டனா். பரிசோதனையில் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.