முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ, மாணவிகளுக்கு கரோனா

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 24 செப்டம்பர், 2021 at 2:54 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதால் செப்டம்பா் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் படிக்கும் மாணவா்கள், ஆசிரியா்களுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியாா் பள்ளி என 395 பள்ளிகளைச் சோ்ந்த ஒரு லட்சத்து 900 மாணவ, மாணவிகள் 9 முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகளில் சுழற்சி முறையில் பங்கேற்று வருகின்றனா். மாவட்டத்தில் முதன்முதலாக செப்டம்பா் 5ஆம் தேதி புன்செய்புளியம்பட்டி கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ்1 மாணவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Advertisement

இதைத் தொடா்ந்து, மறுநாள் கோபி பகுதியைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு மாணவிக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறாகத் தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் மாணவ, மாணவிகள் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, ஒரு சில ஆசிரியா்களுக்கும், பள்ளிகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கும் தொற்று ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ, மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல, 16 ஆசிரியா்கள், பணியாளா்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 28 மாணவ, மாணவிகளில் 8 போ் குணமடைந்துள்ளனா். மீதமுள்ளவா்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.