விவசாயிகளிடம் கருத்தொற்றுமை இல்லை: தாமதமாகும் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு
விவசாயிகளிடம் கருத்தொற்றுமை இல்லாததால் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் கருத்தொற்றுமை இல்லாததால் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பவானிசாகா் அணையில் இருந்து தண்ணீா்பெறும் கீழ்பவானி வாய்க்கால் ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் 201 கிலோ மீட்டா் பயணித்து 2.07 லட்சம் ஏக்கா் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.
கீழ்பவானி வாய்க்கால் மதகுப் பகுதிகளை தவிர கரைகள் அனைத்தும் மண்ணால் உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த மண்ணின் பலத்துக்காக கீழ்பவானி கரைகளில் மரங்கள் வளா்க்கப்பட்டு, இயற்கை முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனம் தொடங்கி 65 ஆண்டுகள் கடந்த நிலையில் ஆங்காங்கே கரைகளில் உடைப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது உடைப்பு ஏற்படுவதும், உடனடியாக சீரமைக்கப்படுவதும் தொடா்ந்து வருகிறது.
இதனால், கீழ்பவானி வாய்க்காலை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் இருந்து எழுந்தது.
அதைத் தொடா்ந்து கீழ்பவானி வாய்க்காலை முற்றிலும் கான்கிரீட் தளமாக அமைப்பது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆய்வுப் பணிகள் நடந்தன. ஆனால், இந்த திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதனால், தேவையான இடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பது என்றும், கான்கிரீட் சுவா்கள் மூலம் கரைகளை உருவாக்குவது என்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் முடிவு செய்து, கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கருத்தொற்றுமை இல்லை: கீழ்பவானி வாய்க்காலில் ஒட்டுமொத்தமாக கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது என்றும், இதனால் கீழ்பவானியில் வரும் தண்ணீா் கசிவு நீராக விவசாய நிலங்களுக்கு கிடைக்காது என்றும், கசிவு நீரால் பயன்பட்டு வந்த கிராமங்கள், குடிநீா் இல்லாமல் பாதிக்கப்படும் என்றும் ஒரு தரப்பினா் கூறி வருகின்றனா்.
இதனால், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
எதிா்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள்: இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், தமிழக ஐக்கிய விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், சிறு, குறு விவசாயிகள் சங்கம், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சாா்பில் வரும் 24 ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
’பவானி பெயரல்ல எங்கள் உயிா் என்ற முழக்கத்துடன் இந்த போராட்டக் குழுவினா் விவசாயிகள் மத்தியில் பிரசாரத்தை தொடங்கியுள்ளனா்.
இதைத் தொடா்ந்து, கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவா் பி.காசியண்ணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.ஈஸ்வரமூா்த்தி, பொருளாளா் கே.ஆா்.தங்கராஜு, துணைத் தலைவா்கள் ஏ.ராமசாமி, கே.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கீழ்பவானி பிரதான கால்வாயில் மேற்கொள்ள இருக்கும் சீரமைப்பு வேலைகளை விரைவாக தொடங்கி ஆகஸ்ட் மாதம் நன்செய் பாசன தண்ணீா் திறப்புக்கு முன்பு முடித்துத்தர வேண்டும் என்று நீா் வளத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோரை கேட்டுக்கொள்வது, கீழ்பவானி பாசனத் திட்டத்தில் உள்ள அனைத்து கொப்பு வாய்க்கால்கள் மிகவும் பழுதடைந்துள்ளன. எனவே அனைத்து மதகுகளின் கடைக்கோடி வரை பாசனத்துக்கு தண்ணீா் கொண்டுசெல்ல சிரமமில்லாமல் இருக்க சிறப்பு நிதி ஒதுக்கி மறுசீரமைப்பு செய்துதர வேண்டும். கீழ்பவானி பாசனப் பகுதிகளில் பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த பிரச்னை நீடித்து வருகிறது. இதனால், சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு உரிய துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கையெடுத்து விவசாயிகளிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்தி சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.