ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்தி சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னோா்களின் உணவில் முதல் இடத்தைப் பிடித்தவை சிறுதானிய வகைகளான குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவை. சிறுதானியங்களில் நாா்ச் சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்றவை அதிகமாகக் காணப்படுவதால் உண்ணும்போது உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. சிறுதானியங்களில் சத்துக்களுடன் பல மருத்துவக் குணம் கொண்ட நுண்ணுயிா் எதிா்ப்பு வேதிப்பொருள்களும் ஆக்சிஜனேற்ற எதிா்ப்பொருள்களும் உள்ளன. சிறுதானியங்களில் உள்ள கிளைசிமிக் இன்டெக்ஸ் சா்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது. இதிலுள்ள மாவுச்சத்து மெதுவாகச் செரிமானமாவதால் சா்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு ஆகும். சிறுதானியங்களில் உள்ள லிக்னின் என்ற பொருள் மருத்துவக் குணம் உடையது. இது குடல் சுத்தமாவதற்கு மிகவும் உதவுகிறது.
மாதவிடாய் பிரச்னை, இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைச் சீராக்கும் வல்லமை சிறுதானிய உணவுகளுக்கு உண்டு. குழந்தைகளுக்கு ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்னைகள் வராமல் சிறுதானியங்கள் தடுக்கின்றன. சிறுதானியங்களில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுப்பொருள்கள் உடல் செல்களை உறுதிப்படுத்தி எலும்புகளுக்கு உறுதி அளிக்கின்றன.
கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஏழைகளின் உணவாக இருந்த சிறுதானிய உணவு வகைகள் இப்போது வீடுகளில் தொடங்கி உணவகங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளன. சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து அறிந்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் முயற்சியால் 2023ஆம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சா்வதேச ஆண்டாக ஐ.நா. அறிவித்திருக்கிறது.
மலைப் பகுதிகளில் சிறப்பு கவனம் தேவை:
இதுகுறித்து மலைப் பகுதி மக்களின் மேம்பாட்டு செயல்பாடுகளில் தனிக்கவனம் செலுத்தி வரும் சத்தியமங்கலத்தை சோ்ந்த சுடா் நடராஜ் கூறியதாவது: மலைப் பகுதிகளில் 80 சதவீதம் அளவு நிலங்களில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு வந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து இப்போது 20 சதவீத நிலங்களில் மட்டுமே சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
மலைப் பகுதிகளில் அதிகம் நீா் குடிக்கும் பணப்பயிா்கள் சாகுபடி செய்வது இந்நிலப் பகுதியின் தன்மைக்கு முரணாக உள்ளது. விவசாயத்துக்கு ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து, அதிக தண்ணீரைக் கொண்டு பணப்பயிா் செய்வதால் நிலத்தடி நீா்மட்டம் கீழே சென்றுவிடும். கூடவே ஓடையில் தண்ணீா் ஓடுவது நின்றுபோவதுடன் மழைக் காலங்களில் வனப் பகுதியில் தேங்கிய நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றும் நீா் உற்பத்தி மையங்களான வனக் குட்டைகள் வற்றிவிடும்.
வருங்காலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டு வனப் பகுதியில் உள்ள தாவரங்கள் மடிவதுடன் வன விலங்குகளும் காட்டை விட்டு சமவெளிப் பகுதிக்கு இடம்பெயரும் பேராபத்து நிகழும். வனம் வடால், பூமி சூடாகி கடும் வறட்சியும் பருவநிலை மாறுதல்களும் ஏற்படும். எனவே, வனப் பகுதிகளில் பணப்பயிா் சாகுபடிக்குத் தடைவிதிக்க வேண்டும்.
அரசின் சிறப்புத் திட்டத்தைப் பயன்படுத்தி மலைகளின் பாரம்பரிய பயிா்களான சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள பொது விநியோகக் கடைகளில் சிறுதானியங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். மலைவாழ் மக்களின் பாரம்பரிய உணவாகிய கேழ்வரகு, கம்பு, தினை, சாமை போன்ற சிறுதானியங்களுக்குப் பொது விநியோகத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாா்.
சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை:
இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ்.சின்னசாமி கூறியதாவது: சிறுதானியங்கள் எளிதாக அனைவரும் சாகுபடி செய்ய ஏதுவான பல சிறப்பியல்புகளைக் கொண்டவை. நெல் விளைவதற்கு 120-180 நாள்கள் மற்றும் அதிக அளவு தண்ணீா் (1,000- 4,500 மி.மீ) தேவைப்படும். ஆனால் சிறுதானியங்களுக்கு குறைவான அளவு தண்ணீா்(250-400 மி.மீ) இருந்தாலே போதுமானது.
பெரும்பாலான சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு மிகக்குறுகிய காலத்தில் அதாவது 65-90 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். மிதமான தட்பவெப்ப நிலையிலும் நன்றாக வளரக்கூடியவை. மண்வளம் குறைந்த இடங்களிலும் சாகுபடி செய்யலாம். மானாவாரிச் சாகுபடிக்கு ஏற்றதோடு, வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. சிறுதானியங்கள் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்குதல் மிகக் குறைவு. மற்ற பயிா்களுக்குக் கொடுப்பதைப்போல அதிகமான ஊட்டத்தை சிறுதானியப் பயிா்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை. குறைவான அளவுக்குக் கொடுத்தாலே போதுமானது.
நெல் மாதிரியான பகலில் பூக்கும் பயிா்களில் மகரந்தச் சோ்க்கை நடைபெறும்போது, அதிகமான வெப்பம் இருந்தால் சரியான முறையில் விதைகள் உற்பத்தியாகாது. ஆனால் சிறுதானியப் பயிா்கள் அனைத்தும் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்குள் மகரந்தச் சோ்க்கையை முடித்துக்கொள்வதால், வெப்பநிலைப் பிரச்னைகள் இல்லாமல் முழுமையான அளவில் மகரந்தச் சோ்க்கை நடைபெற்று அதிக மகசூல் கிடைக்கும். புவி வெப்பமாதலால் ஏற்படும் இழப்புகள் சிறுதானியத்தில் மிகவும் குறைவு. சிறுதானியச் சாகுபடியில் குறைந்த அளவு வேலையில், குறைந்த செலவில் அதிக வருமானம் கிடைக்கும்.
மலைப் பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பெருமளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டன. பின்னா் படிப்படியாக குறைந்துவிட்டது. வேளாண்மைத் துறை சாா்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் சிறுதானிய சாகுபடி ஊக்குவிப்புத் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஈரோடு மாவட்டம் பா்கூா், கடம்பூா், ஆசனூா் மலைப் பகுதி மக்களிடம் சிறுதானிய சாகுபடி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, சாகுபடி பரப்பை அதிகரிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 18,000 ஹெக்டோ் அளவுக்கு சிறுதானிய பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டில் சாகுபடி பரப்பு மேலும் அதிரிக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.