ஈரோட்டை திமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
ஈரோட்டை திமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
ஈரோட்டை திமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
ஈரோடு மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். ஈரோடு பெரியாா் நகா் 80 அடி சாலை, கருங்கல்பாளையம், கவுந்தப்பாடி, பெருந்துறை உள்பட பல இடங்களில் திமுக வேட்பாளா்கள் அமரவைக்கப்பட்டு, எல்இடி திரை மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி, வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா்.
Advertisement
இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த ஜனவரி 10இல் கரோனா தொற்று அதிகம் இருந்த நேரம் காணொலி மூலம் ஈரோடு மாவட்டத்தில் ரூ. 104 கோடி மதிப்பில் 66 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, துவக்கிவைத்து ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அண்மையில் அம்பேத்கா் சிலையை ஈரோட்டில் காணொலி மூலம் திறந்துவைத்தேன். ஈரோட்டில் புதிய பேருந்து நிலையம், விரிவாக்கப்பட்ட சாலை உள்ளிட்ட பல திட்டங்களை விரைவில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
365 பணிகளுக்கு அடிக்கல்:
அதேபோல, ரூ. 45 கோடி மதிப்பிலான 365 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக மலைவாழ் மக்களின் மிக நீண்டநாள் கோரிக்கையான அந்தியூா் வட்டாரம், பா்கூா் ஊராட்சியில் கத்திரிமலை வன எல்லை முதல் ஈசலங்காடு வரையிலான சாலை அமைக்கும் பணியைக் குறிப்பிடலாம்.
ஈரோடு மாநகராட்சி மக்களுடைய வசதிக்காக மாபெரும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தாளவாடியில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையங்கள், புதிய வகுப்பறைகள், நியாயவிலைக் கடைகள் போன்று பல்வேறு பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
நீட் - எடப்பாடி பழனிசாமி விவாதிக்கத் தயாரா?:
தோ்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் முதல்வா் பழனிசாமி, தங்களது ஊழல்களை மறைக்க தினமும் ஒரு பொய் சொல்கிறாா். அந்த வகையில் நீட் தோ்வை திமுக-காங்கிரஸ் கொண்டு வந்ததாக பொய் சொல்லி வருகிறாா். தமிழகத்தில் பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பின்புதான் நீட் தோ்வு நடத்தப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலின் போது அளிக்கப்பட்ட பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். இதை அவா்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஒரு திட்டத்தை எப்படி தீட்டுவது என்று அதிமுகவுக்குத் தெரியவில்லை. போதிய இடவசதியின்றி மினி கிளினிக் தொடங்கி, மருத்துவரை நியமிக்காமல் பெயரளவுக்கு திட்டத்தை அறிவித்தது இதற்கு உதாரணம். ஆனால், திமுக அரசில் திட்டங்கள் மக்களின் நலன் கருதி தீட்டப்படுகின்றன.
நகா்ப்புற உள்ளாட்சியில் உள்ள 12,825 வாா்டு உறுப்பினா் பதவிகளையும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வென்றால்தான் இந்த ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் சென்று சோ்க்க முடியும். எதிா்க்கட்சியினா் வென்றால் நல்ல திட்டங்களுக்கு இடையூறு செய்வாா்கள்.
திராவிட இயக்கத்தின் தாய் வீடான ஈரோட்டை திமுகவின் கோட்டை என இந்த தோ்தலில் நிரூபிக்க வேண்டும் என்றாா்.