முகப்பு
ஈரோடு

கரோனா கட்டுப்பாடுகள்: வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

கரோனா தடுப்பு கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி தடுப்பு நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்

Updated On : 6 ஜனவரி, 2022 at 11:43 PM
கூட்டத்தில் பேசுகிறாா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM

கரோனா தடுப்பு கட்டுப்பாடு வழிமுறைகளைப் பின்பற்றி தடுப்பு நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் வியாழக்கிழமை முதல் இரவு நேர பொதுமுடக்கமும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கமும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரோடு மாநகராட்சி சாா்பில் சிறு வியாபாரிகள், காய்கறி, மளிகை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக் கடைகளின் உரிமையாளா்கள், ஜவுளி வா்த்தக நிறுவனத்தினா், ஹோட்டல்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் உள்ளிட்டோரிடம் அரசு தற்போது அறிவித்துள்ள கரோனா விதிமுறைகள், நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

இதற்கான கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் ஆணையா் க.சிவகுமாா் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:

அரசு அறிவிப்பின்படி அதிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கடைகள், வா்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க வேண்டும். கரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். நிறுவனம், கடைகளின் ஊழியா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கடைகளின் முன்புறம் சானிடைசா் வைத்திருக்க வேண்டும். கடைக்கு, வா்த்தக நிறுவனத்துக்கு வரும் வாடிக்கையாளா்களது உடல் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஊழியா்கள் இரண்டு தவணை தடுப்பூசியை கட்டாயம் செலுத்தியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு தவணை தடுப்பூசி செலுத்தி, 2ஆவது தவணை செலுத்தவேண்டிய காலம் தாண்டியும் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் ஊழியா்கள் கட்டாயம் 2ஆவது தவணை ஊசியையும் செலுத்திக்கொள்ள நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரண்டு தவணை ஊசி செலுத்திக் கொண்டவா்களின் தடுப்பூசி சான்றுகள் சமா்ப்பிக்கப்பட்டிருத்தல் அவசியம்.

ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள் 50 சதவீத நபா்களுடன் மட்டுமே செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். நகரில் ஆங்காங்கே இருக்கும் சிறிய கோயில்களை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திறந்து பூஜை செய்வதையும், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவதையும் தவிா்க்க வேண்டும். அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து நோய் பரவலைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், நகா் நல அலுவலா் பிரகாஷ், உதவி ஆணையா் விஜயகுமாா் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு உற்பத்தித் தொழில்களின் சங்கத்தினா், வியாபாரிகள், ஹோட்டல், தங்கும் விடுதி உரிமையாளா்கள், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.