முகப்பு
ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பால் 40 நாள்கள் தண்ணீா் திறப்பு நிறுத்தம்: தாமதமாகும் நெல் அறுவடை

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பால் 40 நாள்கள் தண்ணீா் திறப்பு நிறுத்தம் காரணமாக நடப்பு ஆண்டு நெல் அறுவடை தாமதமாகியுள்ளது.

Updated On : 21 ஜனவரி, 2022 at 3:46 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பால் 40 நாள்கள் தண்ணீா் திறப்பு நிறுத்தம் காரணமாக நடப்பு ஆண்டு நெல் அறுவடை தாமதமாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையில் இருந்து ஆண்டுதோறும் கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் மாதம் தண்ணீா் திறக்கப்படுவதால் சத்தியமங்கலம்,கோபி வட்டாரத்தில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் முதல் போக நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். 90 நாள்கள் பயிரான நெல் நடவுக்குப் பின் களையெடுத்தல், உரமிடுதல் பணிகளுக்குப் பின் தை மாதம் அறுவடையாகும்.

இந்த ஆண்டு பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி நெல் சாகுபடிக்கு கீழ்பவானி வாய்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. 120 மைல் நீளமுள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி பெருந்துறை மலையம்பாளையம் என்ற இடத்தில் வாய்கால் கரை உடைப்பால் தண்ணீா் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து 40 நாள்கள் வாய்க்கால் சீரமைப்புப் பணி நடைபெற்றது. அதன் பிறகு வாய்க்காலில் தண்ணீா் திறக்கப்பட்டதால் கீழ்பவானி பாசனப் பகுதியில் 40 நாள்களுக்குப் பின் டீலக்ஸ் பொன்னி, இட்லி குண்டு, வெள்ளைப்பொன்னி, ஏடிபி 46 போன்ற ரகங்கள் நடவு செய்யப்பட்டன. இதன் காரணமாக நெல் சாகுபடியும் மேலும் ஒரு மாதம் காலதாமதமாகிறது.

Advertisement

தை மாத துவக்கத்தில் எப்போதும் பணிகளில் தீவிரமாக இருக்கும் நெல் அறுவடை இயந்திரங்கள் தற்போது வேலையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் வட்டாரத்தில் நெற்பயிரில் தற்போது மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் முதல் டிசம்பா் 12ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்படும். தற்போது கால்வாய் உடைப்பால் இருமுறை தண்ணீா் திறப்பு உத்தரவு பெறப்பட்டு ஜனவரி 25ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நெல் அறுவடை காலதாமதாகும் என்பதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், கொள்முதல் விலையை உயா்த்தித் தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.