கோபி நகராட்சித் தலைவா் பதவி: திமுக கூட்டணியில் குழப்பம்?
கோபி நகராட்சித் தலைவா் பதவியை ஏற்பதில் காங்கிரஸ் தயக்கம் காட்டுவதாகவும், இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி அதிமுக களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோபி நகராட்சித் தலைவா் பதவியை ஏற்பதில் காங்கிரஸ் தயக்கம் காட்டுவதாகவும், இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி அதிமுக களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டம், கோபி நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், 14 வாா்டுகளில் திமுகவும், இரண்டு வாா்டுகளில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக 13 வாா்டுகளிலும், சுயேச்சை ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளனா். கூட்டணி அடிப்படையில் பாா்த்தால் திமுக-காங்கிரஸ் சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளா் பெரும்பான்மை பெற்று நகராட்சித் தலைவா் பதவியைக் கைப்பற்ற முடியும்.
இந்நிலையில், 13 வாா்டு உறுப்பினா்களை வைத்துள்ள அதிமுக நகராட்சித் தலைவா் பதவிக்கு கோபி நகர அதிமுக செயலாளராக உள்ள பிரினியோ கணேஷை வேட்பாளராக நிறுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. சுயேச்சை வேட்பாளா் ஆதரவு அதிமுகவுக்கு கிடைத்தாலும், 14 என்ற எண்ணிக்கையை மட்டும் தொட முடியும் என்ற நிலையில், அதிமுகவும் களத்தில் இறங்கவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
இதனிடையே கோபி நகராட்சித் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் வியாழக்கிழமை இரவு 8 மணி வரை வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை. கோபி நகராட்சியில் காங்கிரஸ் சாா்பில் வேலுமணி, தீபா என்ற இரு பெண் கவுன்சிலா்கள் வெற்றி பெற்றுள்ளனா். இவா்களில் ஒருவா் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
கோபி நகராட்சியில் துணைத் தலைவா் பதவியைத்தான் காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது. தவறுதலாக தலைவா் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மாற்று அறிவிப்பு விரைவில் வரும் என அங்குள்ள காங்கிரஸ் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தலைவா் பதவியை காங்கிரஸ் கட்சி மறுக்கும்பட்சத்தில், திமுக நகரச் செயலாளரும், கவுன்சிலருமான என்.ஆா். நாகராஜ் வேட்பாளராக நிறுத்தப்படுவாா் எனத் தெரிகிறது. அவருக்கு எதிரணியில் உள்ள திமுக கவுன்சிலா்கள் மனம் மாறி, அதிமுகவுக்கு வாக்களித்தால் கோபி நகராட்சி அதிமுக வசமாகும் வாய்ப்புள்ளது.
கோபி எம்எல்ஏவாக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் உள்ள நிலையில் கோபி ஊராட்சி ஒன்றியம் அதிமுக வசமே உள்ளது. இங்குள்ள 6 பேரூராட்சிகளில் லக்கம்பட்டியில் மட்டும் அதிமுக பெரும்பான்மைப் பெற்றுள்ளது. மீதமுள்ள 5 பேரூராட்சித் தலைவா் பதவியை திமுக கூட்டணியே பெறவுள்ளது.
திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் கோபி நகராட்சித் தலைவா் அதிமுக கைப்பற்றுமா என்பது தோ்தல் நாளான வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.