முகப்பு
ஈரோடு

தென்னை மரங்களைக் காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களைக் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 25 மார்ச், 2022 at 4:58 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:17 PM

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களைக் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் 15,200 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இயற்கை இடா்பாடு, வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய்த் தாக்குதல், தீ விபத்து, நில அதிா்வால் தென்னை மரங்கள் முழுமையாக, பகுதியாக பாதித்தால் ஆகியவற்றுக்கு காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு பெறலாம்.

Advertisement

தென்னையை தனி பயிராக, ஊடு பயிராக, வரப்பில் வரிசையாக, வீட்டுத் தோட்டத்தில் குறைந்த இடங்களில் என குறைந்தது 5 மரமாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். குட்டை, ஒட்டு ரக தென்னை மரங்கள் நான்காமாண்டு முதலும், நெட்டை மரங்கள் ஏழாமாண்டு முதலும் 60 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்யலாம். ஹெக்டேருக்கு 175 தென்னை மரங்களை மட்டும் காப்பீடு செய்ய இயலும்.

காப்பீடு செய்ய வேண்டிய மரங்களுக்கு வண்ணம் பூசி 1, 2, 3 என எண்கள் குறித்து, விவசாயியுடன் புகைப்படம் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும். 4 முதல் 15 வயது மரம் ஒன்றுக்கு ரூ. 2.25, 16 முதல் 60 வயது மரம் ஒன்றுக்கு ரூ. 3.50 பிரீமியம் செலுத்த வேண்டும்.

காப்பீடு செய்யும் படிவத்துடன், ஆதாா் நகல், வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்கம், சிட்டா, அடங்கல், புல எண் வரைபடம், விவசாயி புகைப்படம், சுயவிவரம், காப்பீடு செய்வதற்கான வேளாண் உதவி இயக்குநா் சான்று இணைத்து அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட், சென்னை என்ற வரைவோலையாக அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.