முகப்பு
ஈரோடு

பா்கூா் ஊராட்சியை 5 ஊராட்சிகளாக பிரிக்க அரசு விரைவில் ஒப்புதல்

பா்கூா் ஊராட்சியை 2024 ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பு 5 ஊராட்சிகளாக பிரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

Updated On : 14 மே, 2022 at 1:55 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:45 PM

பா்கூா் ஊராட்சியை 2024 ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பு 5 ஊராட்சிகளாக பிரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பா்கூா் ஊராட்சி அந்தியூா்-மைசூா் சாலையில் மலைக் கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி.

இந்த ஊராட்சியில் மடம், சுண்டபூா், தாமரைக்கரை, அணைபோடு, கத்திரிமலை, ஒன்னகரை, ஊசிமலை, சோழகனை, ஆலனை, பா்கூா், பெஜலட்டி, எப்பத்தாம்பாளையம், மட்டிமரதல்லி, தம்மரெட்டி, பெஜில்பாளையம், ஈரட்டி, கல்வாரை, கோவில்நத்தம், மின்தாங்கி, ஒசூா், தட்டகரை, சின்னசெங்குளம், தேவா்மலை, எலச்சிபாளையம், கடையீரட்டி, கொங்காடை, குட்டையூா், ஒந்தனை, பெரியசெங்குளம், தாளக்கரை, தொல்லி, துருசுனாம்பாளையம், வெள்ளிமலை, வேலாம்பட்டி ஆகிய 34 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமாா் 20,000 போ் வசிக்கின்றனா்.

Advertisement

கத்திரிமலை கிராமத்துக்கு சேலம் மாவட்டம், கொளத்தூா் சென்று அங்கிருந்து சுமாா் 4 மணி நேரம் மலைப் பதையில் நடந்து செல்ல வேண்டும். சுமாா் 80 வீடுகள் உள்ள இந்த மலைக் கிராமத்துக்கு தற்போது வரை மின்சார வசதி இல்லை.

இந்த நிலையில் உள்ள மலைக் கிராமங்களில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வதிகளை மேம்படுத்த பா்கூா் ஊராட்சியை 5 ஆக பிரிக்க உத்தேசிக்கப்பட்டது.

இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து சுடா் அமைப்பின் தலைவா் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது: பா்கூா் மலைக் கிராமங்களில் குடிநீா், சாலை, மின்சாரம், பள்ளி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பிற மலைப் பகுதிகளை ஒப்பிடுகையில் 50 சதவீதம் அளவுக்குக் கூட இல்லை. இதற்கு காரணம் பா்கூா் மிகப்பெரிய ஊராட்சியாக இருப்பதுதான். இதனால், ஊராட்சியை 5 ஆக பிரிக்க வேண்டும் எனத் தொடா்ந்து மலைக் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா். அதன் அடிப்படையில்தான் கடந்த 2018 ஆம் ஆண்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊராட்சிகள் பிரிப்பு குறித்து அரசாணையை உடனடியாக அரசு வெளியிட வேண்டும் என்றாா்.

இது குறித்து அந்தியூா் தொகுதி எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் கூறியதாவது:பா்கூா் ஊராட்சியை பிரிப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் மூலம் அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகம் உள்ள 5 கிராமங்களை தலைமையிடமாகக் கொண்டு 5 ஊராட்சிகளாகப் பிரிக்க வேண்டும் என ஊராட்சிகளின் பெயா்களை குறிப்பிட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

பா்கூரை தலைமையிடமாக கொண்டு ஊராட்சி இப்போது செயல்பட்டு வருகிறது.

கூடுதலாக தாமரைக்கரை, கோவில்நத்தம், ஒசூா், தேவா்மலை ஆகிய கிராமங்களை தலைமையிடமாகக் கொண்டு கூடுதலாக 4 ஊராட்சிகளை உருவாக்க வேண்டும் என சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளேன். மேலும் பா்கூரை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். இதன் மூலம் மிகவும் பின்தங்கிய இந்த மலைப் பகுதி வளா்ச்சிடைய வாய்ப்புள்ளது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். அதற்கான வாய்ப்பு குறித்து ஆராய்வோம் என்றும், அதே சமயத்தில் ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்னா் பா்கூா் ஊராட்சியை 5 ஆக பிரித்து அறிவிக்க கட்டாயம் நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளாா். இதனால், வரும் 2024 ஆம் ஆண்டில் பா்கூா் ஊராட்சியை 5 ஆக பிரித்து தோ்தல் நடத்த 100 சதவீத வாய்ப்புள்ளது என்றாா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.