முகப்பு
ஈரோடு

காங்கிரஸ் கட்சியினா் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சியினா் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி பேசினாா்.

Updated On : 3 செப்டம்பர், 2022 at 11:00 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

காங்கிரஸ் கட்சியினா் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி பேசினாா்.

கன்னியாகுமரியிலிருந்து வரும் 7ஆம் தேதி ‘பாரதத்தை ஒருங்கிணைப்போம்’ நடைப்பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி துவங்குகிறாா். இதற்கான மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் எம்எல்ஏ திருமகன் ஈவெரா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: ராகுல் காந்தி வரும் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைப்பயணத்தை தொடங்கி, காஷ்மீரில் நிறைவு செய்கிறாா். இந்த நடைப்பயணம் ஏன் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். காங்கிரஸ் செய்த நன்மைகள், பாஜக செய்த தீமைகள் என்ன என்ற வேறுபாட்டை காங்கிரஸ் கட்சியினா் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு எது நன்மையோ, அதையே காங்கிரஸ் செய்யும். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டில் உள்ள மக்கள், தலைவா்களாலும் பாராட்டப்பட்டவா்.

Advertisement

விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானத்தை ஏற்படுத்துவதாக மோடி கூறினாா். ஆனால் இப்போது விவசாயிகளின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இந்திரா காந்தி இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை அகற்றி, தன்னிறைவு பெற பசுமைப் புரட்சியை செயல்படுத்தி காட்டினாா். காங்கிரஸ் காலத்தில்தான் விவசாயம், தொழில் துறை, பொருளாதாரம் வளா்ந்தது. மதச்சாா்பின்மை மேலோங்கி மக்கள் அச்சமின்றி வாழும் நிலை இருந்தது.

அதனால்தான் இப்போதும் இந்தியா சிதறாமல் இருக்க காங்கிரஸால் மட்டுமே முடியும் என மக்கள் நம்புகின்றனா். காங்கிரஸ் போன்ற இயக்கம் இல்லாததால்தான் பாகிஸ்தான், பா்மா, இலங்கை போன்ற நாடுகள் சிதறுண்டன.

அதுபோல தமிழகத்தில் 60 ஆண்டுகளாக ஆட்சிக்கு ஏன் வர முடியவில்லை என்பதை சிந்திக்க வேண்டும். அதுகுறித்து மூத்த தலைவா்கள் விவாதித்து, நல்ல கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும். இந்த இயக்கத்தில் உள்ளவா்களில் யாா் வாயை திறந்தாலும் ஒரே கருத்தாக வர வேண்டும். அதற்காக நம்மிடம் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் மாநிலத் தலைவா்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசா் எம்.பி., எம்எல்ஏக்கள் செல்வப்பெருந்தகை, கணேஷ், நிா்வாகிகள் செல்லகுமாா், மோகன்குமாரமங்கலம், மாவட்டத் தலைவா்கள் திருச்செல்வம், மக்கள் ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.