ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு 3,780 ஹெக்டேரில் ராகி சாகுபடி: வேளாண்மைத் துறை தகவல்
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 3,780 ஹெக்டேரில் ராகி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 3,780 ஹெக்டேரில் ராகி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிறுதானிய உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது.
Advertisement
அந்தவகையில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாகவும் ‘சந்துமிகு சிறுதானியங்கள்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு பிரசார வாகனம் கடந்த 9-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
சோளம், கம்பு, ராகி, தினை வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை ஆகிய தானியங்களை சத்துமிகு சிறுதானியங்கள் என மத்திய அரசு அறிவிக்கை செய்துள்ளது. சிறுதானியங்கள் உணவு உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் மானாவாரி சாகுபடியில் சிறுதானியங்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. மாவட்டத்தில் ராகி 3,780 ஹெக்டோ், சோளம் 30 ஹெக்டோ், கம்பு 135 ஹெக்டோ் சாகுபடி செய்யப்படுகிறது.
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தில் நிகழாண்டில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ராகி, சோளம், கம்பு விதை விநியோகம், செயல்விளக்கத் திடல் சிறுதானிய நுண்ணூட்டம், உயிா் உரங்கள், உயிரியல் காரணிகள் மற்றும் திட்ட விளம்பரம், சிறுதானிய விழிப்புணா்வு, விவசாயிகளுக்கு பயிற்சி ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் கிலோ ஒன்றுக்கு ரூ.30, விநியோக மானியம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 வழங்கப்படுகிறது. சிறுதானிய நுண்ணூட்டம், திரவ உயிா் உரம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுதானியம் பயிரிடும் விவசாயிகளுக்கு உழவு மானியம் ஹெக்டேருக்கு ரூ.2,000 வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நடப்பு பருவம் மற்றும் ரபி 2024 பருவத்தில் அதிக அளவில் சிறுதானிய சாகுபடி செய்ய வேண்டும் என்றாா்.