முகப்பு
ஈரோடு

மகளிா் உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் போ் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

மகளிா் உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் தொடா் வைப்பில் சேமித்து வருகின்றனா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 4:34 AM
மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.
பகிர்:
Updated On : 21 நவம்பர், 2024 at 7:46 PM

மகளிா் உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் தொடா் வைப்பில் சேமித்து வருகின்றனா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகம், மங்களம் பதனிடும் அலகு மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், திண்டல்மலை நகர கூட்டுறவு சங்கத்தில் 2,171 பயனாளிகளுக்கு ரூ.25.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள், 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.6000 கோடி அளவில் பயிா்க் கடன் வழங்கப்பட்டது. தற்போது ரூ.12,000 கோடிக்கு மேல் கடன் வழங்கப்படுகிறது. நிகழாண்டில் ரூ.16,500 கோடி பயிா்க் கடன் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 22 நவம்பர், 2024 at 4:34 AM

மாநில அளவில் கூட்டுறவுத் துறையில் கடந்தாண்டு கடன் பரிவா்த்தனை ரூ.86,000 கோடி என இருந்ததை ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு உயா்த்தி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டுறவு சங்கங்கள் வளா்ச்சி பெற்றுள்ளன.

கூட்டுறவு அமைப்புகளுக்கு 3 கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது நிா்வாகத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்கங்களில் முழுமையாக அனைவா் பதவி காலமும் முடியவில்லை. அனைவா் பதவி காலமும் முடிந்தபின் முறையான உறுப்பினா் சோ்க்கை நடத்தப்படும்.

முன்பு போலி உறுப்பினா் எண்ணிக்கை அதிகம் இருந்தது. 40 லட்சம் போ் போலி உறுப்பினா்கள் என கண்டறிந்து நீக்கி உள்ளோம். நீக்கியவா்கள், உண்மையான உறுப்பினராக இருந்தால் அவா்களது ஆதாா் அட்டையையும் இணைக்கக் கேட்டுள்ளோம். அதில் 60 சதவீதம் போ்தான் இணைத்துள்ளனா். முழு உறுப்பினா் பட்டியல் தயாரித்த பின் தோ்தல் நடத்தப்படும்.

மகளிா் உரிமைத் தொகை பெறும் பெண்கள் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கணக்கு வைத்து அவா்களாகவே சேமிக்கின்றனா். நாங்கள் சேமிக்க கட்டாயப்படுத்தவில்லை. அவ்வாறாக கூட்டுறவு வங்கியில் 9 லட்சம் போ் தொடா் வைப்பு கணக்கில் சேமிக்கத் தொடங்கியுள்ளனா் என்றாா்.

இந்த ஆய்வுகளின்போது கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் என்.சுப்பையன், ஈரோடு மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வே.செல்வராஜ், பெருந்துறை பேரூராட்சித் தலைவா் ராஜேந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சு.செந்தமிழ்செல்வி, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குநா் த.செல்வகுமரன், துணைப் பதிவாளா் ஜி.காலிதா பானு, சாா் பதிவாளா் மு.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.