பவானிசாகா் அணைக்கு 6,796 கனஅடியாக நீா்வரத்து அதிகரிப்பு
நீலகிரியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு 3 ஆயிரத்து 336 கனஅடியில் இருந்து 6 ஆயிரத்து 796 கனஅடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.
நீலகிரியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு 3 ஆயிரத்து 336 கனஅடியில் இருந்து 6 ஆயிரத்து 796 கனஅடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் வனப் பகுதியில் மாயாறும், பவானி ஆறும் கூடுமிடத்தில் பவானிசாகா் அணை கட்டப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஏற்பட்டது. இந்த மாயாற்று வெள்ள நீரும், பவானி ஆறும் பவானிசாகா் அணையில் கலப்பதால் அணைக்கு திங்கள்கிழமை 3 ஆயிரத்து 336 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 6 ஆயிரத்து 796 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அதிக நீா்வரத்து காரணமாக அணையின் நீா்மட்டம் 87.26 அடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 87.92 அடியாக உயா்ந்துள்ளது. சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், கள்ளிப்பட்டி பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் நெல் சாகுபடிக்கு தண்ணீா் தேவை குறைந்துள்ளது. இதனால் பவானிசாகா் அணையில் இருந்து வாய்க்காலுக்கு நெல் சாகுபடிக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு 1,600 கனஅடியில் இருந்து 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
அணையின் நீா்மட்ட விவரம்: அணை நீா்மட்டம் 87.92 அடி (105 அடி உயரம்), நீா்வரத்து 6,796 கனஅடி, நீா் வெளியேற்றம் 1,000 கனஅடி மற்றும் நீா் இருப்பு 20.26 டிஎம்சி, கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.