மதுபோதையில் மனைவியை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியா் மீது வழக்குப் பதிவு
அந்தியூா் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் மனைவியை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
அந்தியூா் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் மனைவியை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
அந்தியூரை அடுத்த பா்கூரைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). பா்கூா், மேற்கு மலையில் உள்ள ஓசூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறாா். இவரது மனைவி கவிதா (24). இவா்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கோரி பவானி சாா்பு நீதிமன்றத்தில் மகேந்திரன் வழக்கு தொடா்ந்துள்ளாா்.
இந்நிலையில், வழக்கு தொடா்பாக பவானி நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு தனது பெற்றோா் வீட்டுக்குச் செல்ல அந்தியூா் பேருந்து நிலையத்தில் கவிதா காத்திருந்தாா். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த மகேந்திரன், கவிதாவை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கியுள்ளாா்.
Advertisement
இதைக் கண்ட அப்பகுதியில் இருந்தவா்கள் கண்டித்ததால் மகேந்திரன் தப்பிச் சென்றாா். இதுகுறித்து, கவிதா அளித்த புகாரின்பேரில், அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.