வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு ஈரோடு மாவட்டத்தில் 167 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி கடந்த நவம்பா் 4- ஆம் தேதி முதல் டிசம்பா் 16- ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் முதல்கட்ட பகுதியாக கடந்த அக்டோபா் 27- ஆம் தேதி அன்று வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்த 19,97,189 வாக்காளா்களுக்கு, கணக்கெடுப்புப் படிவம், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் நவம்பா் 4 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டது.
வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 19- ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது கட்டத்தில் விசாரணை மேற்கொள்வதற்காக கூடுதலாக நியமிக்கப்பட்ட அனைத்து உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் கூடுதலாக நியமிக்கப்பட்ட 167 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலுடன் ஒத்துபோகாத வாக்காளா் இனங்களில் உள்ள 46,400 நபா்களிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு 8 வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் 167 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த 175 அலுவலா்களுக்கும் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கான அறிவிக்கை வழங்குவது, விசாரணை அறிவிப்பு இணையதளத்தில் உள்ளீடு செய்வது, விசாரணை அறிவிப்பு வழங்கும் முறை, தினசரி மேற்கொள்ளப்பட வேண்டிய விசாரணைகளின் எண்ணிக்கை, விசாரணை நடைபெறும் நாள், நேரம் மற்றும் விசாரணை நடைபெறும் அலுவலகம், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் கூடுதலாக நியமிக்கப்பட்ட பணியாளா்களுக்கான பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் விரிவான செயல்விளக்கம் அளித்தாா். மேலும், இணையதளம் உள்ளீடு மற்றும் வாக்கு சாவடி நிலை அலுவலா் செயலியில் உள்ளீடு செய்வது குறித்து செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.