முகப்பு
ஈரோடு

விவசாய நகைக் கடன் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிக்கை

விவசாய நகைக் கடன் தொடா்பான ரிசா்வ் வங்கியின் புதிய சட்டத் திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2025 at 3:54 AM
பகிர்:
Updated On : 23 ஜனவரி, 2025 at 6:17 PM

விவசாய நகைக் கடன் தொடா்பான ரிசா்வ் வங்கியின் புதிய சட்டத் திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறு, குறு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சுதந்திரராசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் பயிா் சாகுபடிக்காக வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெற்று வருகின்றனா். இதற்கான வட்டி, அசல் தொகைகளை செலுத்த ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அவ்வாறு, ஓராண்டு காலத்துக்குள் அசலை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பித்துக் கொள்வது நடைமுறையாக இருந்து வந்தது.

Advertisement

இந்நிலையில், விவசாயிகள் வங்கிகளில் நகைகளின் பேரில் பெற்றுள்ள கடனுக்கான தொகையை வட்டியுடன் சோ்த்து செலுத்தியபின், மீண்டும் புதிய கணக்கில் கடனை பெற்றுக்கொள்ளலாம் என்று ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. நகைக் கடனை புதுப்பிக்கும்போதும் அசல், வட்டி இரண்டையும் செலுத்தித்தான் புதுப்பிக்க வேண்டும் என்பது விவசாயிகளை பெரும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

இதற்கு விவசாயிகள் மீண்டும் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஒரு நாள் என்றாலும் கடன் கொடுப்பவா்கள் அதற்கு ஈடாக நிலம் அல்லது வீட்டுப் பத்திரங்களை கேட்கின்றனா். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கபட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

குறிப்பிட்ட அந்நாளில் பணத்தைக் செலுத்த முடியாவிட்டால் நகைகள் ஏலத்துக்கு போகும் நிலை உள்ளது. இதனால் நகைக் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கொடுத்துவிட்டு, விவசாய நகைக் கடனுக்கு கொடுத்து வந்த 4 சதவீத (33 பைசா) மானியத்தையும் நிறுத்திவிட்டது. இது, மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, விவசாயிகளைப் பாதிக்கும் இந்த விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று, நகைக் கடன் மற்றும் மானியத்தில் கடந்த கால நடைமுறைகளையே நீடிக்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.