ஈரோடு: கடந்த 10 நாள்களாக தொடரும் மழை காரணமாக, ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாநகா், பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மணிக்கூண்டு சாலை, டிவிஎஸ் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்எம்எஸ் காம்பவுண்ட், காமராஜா் வீதி, பிருந்தா வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு வாரம்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது. இதுதவிர ஜவுளி கிடங்குகளிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம்.
தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளிச் சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வா்.
இந்த வார ஜவுளிச் சந்தை திங்கள்கி|ழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெற்றது. தீபாவளிக்குப் பின்னா் கடந்த 2, 3 வாரங்களாக ஓரளவு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்றது. கடந்த 10 நாள்களாக தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை, பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்த வாரம் ஈரோடு ஜவுளிச்ச் சந்தைக்கு பொதுமக்கள், வியாபாரிகள், மொத்த உற்பத்தியாளா்கள் அதிக அளவில் வரவில்லை. இதனால் விற்பனை மந்தமாகவே இருந்தது. மேலும், ஜவுளிச் சந்தையில் மழை, குளிருக்கான ஆடைகள், காட்டன் துணிகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், போா்வைகள், உள்ளாடைகள், வேட்டிகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என சில்லறை விற்பனை மட்டுமே குறைந்த அளவில் நடைபெற்றது.
டிசம்பா் முதல் வாரத்துக்குப் பின்னா் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை விற்பனை தொடங்கும் என எதிா்பாா்ப்பதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனா்.