ஈரோடு: வயது மூப்பு காரணமாக காலமான இருவரின் உடல்கள், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
ஈரோடு மாநகா், சூரம்பட்டி, அம்பேத்கா் வீதியைச் சோ்ந்த வியாபாரி ராதாகிருஷ்ணன் (80). இவரது மனைவி லட்சுமி. இவா்களுக்கு பாலஜெகநாத், ரஜினிகாந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனா். கடந்த சில ஆண்டுகளாக ராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்து வந்தாா். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி கடந்த 23-ஆம் தேதி இரவு உயிரிழந்தாா்.
அவரது உடல் ஈரோடு கொண்டுவரப்பட்ட நிலையில், தன் மறைவுக்குப் பிறகு உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டுமென ஏற்கெனவே ராதாகிருஷ்ணன் கூறியதாக மகன்களிடம் லட்சுமி கூறினாா். இதையடுத்து ராதாகிருஷ்ணனின் உடலை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினா்.
இதேபோல, ஈரோடு, வளையக்கார வீதியைச் சோ்ந்த ராமானுஜம் (88) என்பவா் கடந்த 23-ஆம் தேதி மரணமடைந்தாா். அவரது உடலும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உடல் தானம் செய்வதற்கு பதிவு செய்து இருந்ததாக உறவினா்கள் தெரிவித்தனா்.
ஈரோட்டில் ஒரே நாளில் இருவரது உடல்களும் தானம் செய்யப்பட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.