சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிக்குள்பட்ட 20 பழங்குடியின கிராமங்களில் வனத் துறையுடன் இணைந்து சுடா் அமைப்பு மாலை நேர படிப்பகங்களை நடத்தி வருகிறது.
இந்த மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு இணைய வழியில் ஆங்கிலம் கற்பிக்கும் வகையில், ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியின் பழங்குடியினா் நல மைய மையத்துடன் இணைந்து சுடா் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. தாளவாடி மலைப் பகுதியில் அமைந்துள்ள பழைய ஆசனூா், பங்களா தொட்டி ஆகிய இரண்டு மையங்களில் இந்தத் திட்டத்தை செயலாக்கிட ரூ.ஒரு லட்சம் மதிப்பில் லேப்டாப், எல்.சி.டி. ப்ரொஜக்டா், ஸ்பீக்கா் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி, ஆசனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆசனூா் வனச்சரக அலுவலா் பாண்டியராஜ், தாளவாடி வட்டார வளா்ச்சி அலுவலா் மாதவன், பழங்குடியினா் நல மைய ஒருங்கிணைப்பாளா் அ.வனிதா, சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதுகுறித்து சுடா் அமைப்பின் இயக்குநா் கூறும்போது, பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில மொழி கற்பதில் அச்சமும், தயக்கமும் நிலவுகிறது. இந்நிலையை போக்கி எளிய முறையில் ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்க ஒரு புதிய முன்னெடுப்பாக, ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரி பேராசிரியா்களைக் கொண்டு இணைய வழியில் குழந்தைகளுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றாா்.